கொரோனா கட்டுப்பாடுகளுடன் சித்திரை திருவிழா இன்று அழகர்கோவிலில் துவங்குகிறது

அலங்காநல்லூர்: உலகப் பிரசித்தி பெற்ற அழகர்கோவில் கள்ளழகர் கோவில் சித்திரைப் பெருந்திருவிழா கடந்த ஆண்டு கொரோனா தொற்று  காரணமாக நடத்த அரசு அனுமதி தரவில்லை. இதனால் கோயில் வளாகத்திற்குள்ளேயே அனைத்து வைபங்களும் நடந்து முடிந்தது. அதன் பிறகு பல  தளர்வுகளை அரசு அறிவித்தன் பேரில், கோயில் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.இந்நிலையில் கடந்த சில வாரங்களாக மீண்டும் கொரோனா 2வது அலையால் தமிழகத்தில் பொதுநிகழ்ச்சிகளுக்கு அரசு தடை விதித்தது.  இந்நிலையில் இந்த ஆண்டு கள்ளழகர் மதுரை வைகையாற்றில் இறங்குவதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை

அனுமதி மறுத்து விட்டது.

இதையொட்டி கோயில் நிர்வாகத்தினர், திருக்கோயில் பட்டர்களிடம் கருத்துரு கேட்டனர். அவர்களது ஆலோசனையின்படி, இந்த ஆண்டு கோயில்  வளாகத்திலேயே சித்திரை திருவிழாவை ஆகமவிதிப்படி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று(ஏப்.22) மாலை கோயில்  வெளிபிரகாரத்தில் கள்ளழகர் பெருமாள் பல்லக்கில் ஆடிவீதி வழியாக பவனி வந்து திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருள்கிறார்.அப்போது பக்தர்கள் அரசு வழிகாட்டுதல்படி சமூக இடைவெளி பின்பற்றி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஏப். 24, 25 தேதிகளில் கோயில்  வளாகத்திலேயே வழக்கம் போல் மாலையில் திருவிழா நிகழ்ச்சி நடைபெறும். ஏப்.26ம் தேதி காலை 9.15 மணிக்கு மேல் 10 மணிக்குள் எதிர்சேவை  நிகழ்வு, கள்ளர் திருக்கோலத்துடன் நடைபெறுகிறதுஏப். 27ம் தேதி காலை 8 மணிக்கு குதிரை வாகனம், ஆண்டாள் மாலை சாற்றுதல், காலை 8.30 மணிக்கு, குதிரை வாகனத்தில் சுவாமி ஆடி வீதியில்  புறப்பாடும், ஏப்.28ம் தேதி காலை 7 மணிக்கு சைத்திய உபசாரம் சேவையும், அன்று காலை 10.30 மணிக்கு சேஷ வாகனம் புறப்பாடும் நடைபெறும்.  

ஏப்.29ம் தேதி காலை 10 மணிக்கு கருட சேவை, புராணம் வாசித்தல், மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளித்தலும் நடைபெறும். ஏப்.30ம் தேதி காலை  10 மணிக்கு புஷ்ப பல்லக்கும், மே 1ம் தேதி சனிக்கிழமை அர்த்த மண்டபத்தில் சேவையும், 2ம் தேதி ஞாயிற்றுகிழமை காலை 10 மணிக்கு உற்சவ  சாந்தி ,திருமஞ்சனமும் நடைபெறும்.

இதில் ஏப்.26ம் தேதி முதல் ஏப்.30ம் தேதி வரை காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை திருக்கல்யாண மண்டபத்தில் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து சமூக வழிகாட்டுதல்படி கலந்து கொண்டு கள்ளழகர் பெருமாளை தரிசனம் செய்யலாம்.கோயில் நிர்வாகத்தின் அறிவிப்பில், கள்ளழகர் தங்கக்குதிரை வாகனத்தில் கோயில் வளாகத்திற்கு உள்ளேயே மாதிரி வைகை ஆறு அமைத்து கடந்த  ஆண்டைப் போல் இந்த ஆண்டும் எழுந்தருளும் திருவிழா நடத்தப்படுமா என்பது குறித்து எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லையென்பது  குறிப்பிடத்தக்கது.

திருவிழா நிகழ்ச்சிகளை எல்இடியில் காணலாம்

அழகர்கோவில் திருவிழாவின் போது சுவாமி மீது தண்ணீர் பீய்ச்சுவதும், திரி எடுத்தலுக்கும், தீர்த்தம், அர்ச்சனை, மாலை சாற்றுதல், மரியாதை  போன்றவைக்கு இந்த ஆண்டு அனுமதி கிடையாது. மேலும் திருவிழா நிகழ்ச்சிகளை கோயில் தேரோடும் வீதிகள், கோவில் பஸ்நிலையம்,  தல்லாகுளம் வெங்கடாசலபதி கோயில் பகுதி, வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயில் பகுதிகளில் எல்இடி டிவி மூலம் பொதுமக்கள் சேவார்த்திகள்  காண்பதற்கு வசதியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள்,  அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories:

>