×

மருத்துவமனைகளில் களவாடப்படும் உயிர்காக்கும் மருந்துகள்!: ம.பி.யில் 137 ரெம்டெசிவிர் மருந்து குப்பிகள் மாயம்..போலீசார் விசாரணை..!!

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் வைக்கப்பட்டிருந்த உயிர்காக்கும் ரெம்டெசிவிர் மருந்துகள் மாயமாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நாடு முழுவதும் கொரோனா 2வது பரவல் அதிதீவிரமடைந்திருக்கும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் மருத்துவமனைகளில் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் உயிர்காக்கும் மருந்துகள் மாயமாகும் செய்திகள் வெளிவந்தபடி இருக்கின்றன. மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஷல்பி மருத்துவமனையின் மருந்து கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டிருந்த ரெம்டெசிவிர் உயிர்காக்கும் மருந்துகளில் 137 குப்பிகள் மாயமாகியிருக்கின்றன. இதுகுறித்த மருத்துவமனை நிர்வாகத்தின் புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்துள்ள துக்கோ கட்ச் நகர காவல்துறையினர், சந்தேகத்தின் அடிப்படையில் மருத்துவமனை ஊழியர் புபேந்திர ஷலிவால் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல்துறை விசாரணையில் தனது உறவினர்களில் ஒருவருக்கு 2 ரெம்டெசிவிர் மருந்து குப்பிகளை மட்டுமே கொடுத்ததாக புபேந்திர ஷலிவால் ஒப்புக்கொண்டிருப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ரெம்டெசிவிர் மருந்துகளை களவாடியவர்கள் யார் என்று துக்கோ கட்ச் நகர காவல் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொன், பொருள் கொள்ளைகளுக்கு மத்தியில் தற்போது தடுப்பூசி மற்றும் உயிர்காக்கும் மருந்துகளும் களவாடப்படும் நிகழ்வுகள் அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ம.பி. காவல் ஆய்வாளர் கமலேஷ் சர்மா தெரிவித்ததாவது, உயிர்காக்கும் மருந்துகள் காணாமல் போனதாக, மருத்துவமனை நிர்வாகம் புகார் அளித்துள்ளது. அதன் அடிப்படையில் மருந்து கிடங்கின் பொறுப்பாளரை பிடித்து விசாரித்தோம். அப்போது தனது உறவினர்களுக்கு 2 ரெம்டெசிவிர் மருந்து குப்பிகளை மட்டும் கொடுத்ததாக ஒப்புக்கொண்டார். மற்றபடி மாயமான எஞ்சிய மருந்துகள் பற்றி தமக்கு தெரியாது என்று கூறுகிறார். மருந்துகள் மாயமானது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றோம் என குறிப்பிட்டார்.


Tags : Hospital, M.P., 137 Remtacivir medicine, vial, magic
× RELATED ஆந்திர மாநில புதிய டிஜிபி பொறுப்பேற்பு