×

கொரோனா தடுப்பூசி குறித்து பேசியதாக வழக்கு; நடிகர் மன்சூர் அலிகான் முன்ஜாமீன் மனு தள்ளுபடி: செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது தொடரப்பட்ட வழக்கில், முன்ஜாமீன் வழங்க முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் மறுத்துவிட்டது. நடிகர் விவேக், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மறுநாள் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் மரணம் அடைந்தார். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், கொரோனா தடுப்பூசி குறித்தும், அரசியல்வாதிகள் குறித்தும் சில கருத்துகளை தெரிவித்தார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.இதை தொடர்ந்து, சென்னை மாநகராட்சி ஆணையர் கொடுத்த புகாரில் நடிகர் மன்சூர் அலிகான் மீது வடபழனி காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார். இந்த மனு முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி செல்வகுமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீஸ் தரப்பில் ஆஜரான மாநகர அரசு குற்றவியல் வக்கீல் ஜெய்சங்கர், பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளதால் மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்று ஆட்சேபம் தெரிவித்தார். இதையடுத்து, மன்சூர் அலிகானின் முன்ஜாமீன் மனுவில் முதல் தகவல் அறிக்கை குறித்த விவரங்கள் தெளிவாக குறிப்பிடவில்லை எனக் கூறி  புதிய மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு முன்ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags : Mansoor Ali Khan ,Sessions , Case of talking about corona vaccine; Actor Mansoor Ali Khan's pre-bail petition dismissed: Sessions court orders
× RELATED சின்னத்துக்காக தேர்தல் கமிஷன்...