12 புராண இதிகாசங்களிலும் குறிப்பு ஆஞ்சநேயர் பிறந்தது அஞ்சனாத்ரி மலைதான்: ஆதாரங்களை வெளியிட்டார் தமிழக கவர்னர்

திருமலை: திருமலை அஞ்சனாத்ரி மலையில் தான் ஆஞ்சநேயர் பிறந்தார் என்ற ஆதாரங்கள் கொண்ட புத்தகத்தை திருமலையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் வெளியிட்டார். திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ள சேஷாச்சல மலைத்தொடரில் சேஷாத்ரி, அஞ்சனாத்ரி, நாராயணாத்ரி, விருஷபாத்ரி, கருடாத்ரி, வேங்கடாத்ரி மற்றும் நீலாத்ரி ஆகிய 7 மலைகள் உள்ளது. இதில், அஞ்சனாத்ரி மலையில் ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனாதேவி ஆகாச கங்கை தீர்த்தம் அருகே நீண்ட காலம் தவமிருந்து ஜபாலி என்னும் இடத்தில் ஆஞ்சநேயரை பெற்றார் என்று கூறப்படுகிறது. இதனை இதிகாச புராணங்களை ஆய்வு செய்து ஆதாரங்களுடன்  நிரூபிக்கும்படி தேவஸ்தான தலைமை செயல் அதிகாரி ஜவகர், தேசிய சமஸ்கிருத வித்யா பீடத்தின் துணைவேந்தரும், பேராசிரியருமான முரளிதர் சர்மா தலைமையில் சிறப்பு கமிட்டியை கடந்த ஆண்டு டிசம்பரில் அமைத்தார்.

இதில், கடந்த 4 மாதங்கள் பல்வேறு ஆய்வு கட்டுரைகள், வரலாற்று இதிகாசங்களை ஆய்வு செய்து, ஆஞ்சநேயர் அஞ்னாத்திரி மலையில் தான் பிறந்தார் என்பது உறுதி செய்யப்பட்டது. நேற்று அதிகாலை ஏழுமலையான் கோயிலில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், ஆஞ்சநேயர் அஞ்னாத்ரி மலையில் தான் பிறந்தார் என்பது குறித்து ஆதாரங்களுடன் கூடிய புத்தகத்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டார். அப்போது பேசிய அவர், ‘‘சென்னையிலிருந்து நான் புறப்படும் போது இதுகுறித்து எவ்வித தகவலும் எனக்கு தெரியாது. தேவஸ்தானம் ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளதால் ஆஞ்சநேயர் பிறப்பு குறித்து சர்ச்சையைஇனிமேல் ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை,’’ என்றார். ஏற்கனவே, ஆஞ்சநேயர் குஜராத், கர்நாடகா, ஜார்கண்ட் மாநிலங்களில் பிறந்ததாக கூறப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தகத்தில் கூறப்பட்டுள்ள ஆதாரங்கள் வருமாறு:

* வெங்கடேஸ்வர மதியம், வராக புராணம், கம்பராமாயணம், வால்மீகி ராமாயணம் உள்ளிட்ட 12 புராண இதிகாசங்களில் அஞ்சனாத்ரி மலையில்தான் அனுமன் பிறந்தார் என்று கூறப்பட்டுள்ளது.

* ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வட ஆற்காடு மாவட்ட கலெக்டராக இருந்த ஸ்டார்டன் தயார் செய்த ‘‘சவால் இ ஜவாப்’’ என்னும் ஆவண கோப்பில் அஞ்சனாத்ரி மலை பற்றி குறிப்பிட்டுள்ளார்.

* காஞ்சிபுரத்தில் 20 செப்பேடுகளில் அஞ்சனாத்ரி மலை குறித்து கூறப்பட்டுள்ளது.

*  ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயில் கல்வெட்டில் அஞ்சனாத்ரி மலையிலிருந்து உற்சவரான ஸ்ரீ ரங்க நாத மூர்த்தியை கொண்டு வந்ததாக கூறப்பட்டுள்ளது.

* அன்னமாச்சாரியார் 14ம் நூற்றாண்டில் பாடிய கீர்த்தனைகள் மற்றும் சாசனங்கள், இதிகாசங்கள், புராணங்கள், பூகோள ரீதியான தகவல்கள் போன்ற அனைத்திலும் அனுமன் அஞ்சனாத்திரி மலையில் தான் பிறந்தார் என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>