பட்டாசு கடை விபத்தில் தந்தை, 2 குழந்தை பலி ரயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை: காட்பாடி அருகே சோகம்

வேலூர்: காட்பாடி அருகே லத்தேரியில் பட்டாசு கடை வெடி விபத்தில் தந்தையையும், 2 மகன்களையும் பறிகொடுத்த இளம்பெண் விரக்தியில் நேற்று அதிகாலை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி ரயில் நிலைய தண்டவாளத்தில் நேற்று அதிகாலை இளம்பெண் சடலம் கிடந்தது. ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் இறந்து கிடந்தவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை லத்தேரியில் பட்டாசு கடை வெடிவிபத்தில் இறந்த மோகனின் மகள் வித்யா(31) என்பது தெரிய வந்தது.

லத்தேரி பஸ் நிறுத்தத்தில் பட்டாசு கடை நடத்தி வந்தவர் மோகன்(55). இவருக்கு வித்யா(31), திவ்யா(32) என இரண்டு மகள்கள். இருவருக்குமே திருமணமாகிவிட்டது. வித்யா கணவர் சுரேஷூடன் சென்னையில் வசித்து வந்தார். சுரேஷ் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். வித்யா ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இளைய மகள் திவ்யா கணவர், குழந்தையுடன் வெளியூரில் வசித்து வருகிறார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக வித்யா கணவரை பிரிந்து 2 மகன்களான தனுஷ்(8), தேஜாஸ்(6) ஆகியோருடன் சில ஆண்டுகளாக தந்தை மோகன் வீட்டில் வசித்து வந்தார். பள்ளி விடுமுறை காரணமாக மோகன், தனது பேரக்குழந்தைகளுடன் கடந்த 18ம் தேதி பட்டாசு கடையில் இருந்தார்.

அப்போது, கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் புதிய ரக பட்டாசு ஒன்றை சாம்பிளுக்காக வெடித்தபோது தீப்பொறி கடைக்குள் விழுந்து மோகன், பேரன்கள் தனுஜ், தேஜாஸ் ஆகியோர் கருகி பலியாகினர். தந்தையும், 2 மகன்களும் பலியானதால் கடந்த 2 நாட்களாக வித்யா விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. உறவினர்களிடம், ‘‘எனக்கென்று யாரும் இல்லை. நான் வாழ்ந்து என்ன பயன்?’’ என்று கூறி அழுதாராம். சென்னையில் இருந்து மகன்களின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள வந்த வித்யாவின் கணவர் சுரேஷ், மனைவியிடம், குழந்தைகளின் மரணம் தொடர்பாக தகராறு செய்தாராம்.

இதுவும் வித்யாவை மனதளவில் பாதித்துள்ளது. இந்த நிலையில்தான் நேற்று அதிகாலை வித்யா, வீட்டில் இருந்து வெளியேறி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாயும் தற்கொைல முயற்சி: இந்நிலையில் நேற்று மோகன் மனைவி மோகனா(57), வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

Related Stories:

>