×

தடுப்பூசி 100 சதவீதம் பாதுகாப்பானது தரமணியில் 900 படுக்கையுடன் கோவிட் மையம்: மேலும் 10 ஆயிரம் படுக்கைகள் தயார் செய்ய நடவடிக்கை; மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டி

சென்னை: தடுப்பூசி 100 சதவீதம் பாதுகாப்பானது அனைவரும் போட்டுக் கொள்ளலாம் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறினார். சென்னை, மாநகராட்சி பெருங்குடி மண்டலத்துக்கு உட்பட்ட தரமணியில் உள்ள சென்னை பல்கலைக்கழக முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கான தங்கும் விடுதியில் 900 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கோவிட் பாதுகாப்பு மையத்தை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இணை ஆணையர் (சுகாதாரம்) ஆல்பி ஜான் வர்கீஷ், துணை ஆணையர் (வருவாய்) மேகநாத ரெட்டி ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது: ஓமந்தூரார் மருத்துவமனை கண்காணிப்பில் சென்னை பல்கலைக்கழக முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கான தங்கும் விடுதியில் 900 படுக்கை வசதிகளுடன் கோவிட் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது மாதிரியான மையங்கள் 14 இடங்களில் 12,500 படுக்கைகளுடன் உள்ளது. அதில் 1,719 நிரம்பியுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா வந்தபோது 22,500 படுக்கைகள் ஏற்பாடு செய்து வைத்திருந்தோம். அண்ணா பல்கலைக்கழகம், அத்திப்பட்டு குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு பகுதிகளில் அமைந்துள்ளது. இன்னும் 10 ஆயிரம் படுக்கைகள் தயார் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இது தற்போது 25 ஆயிரமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று தனியார் கோவிட் கேர் சென்டர் ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஓட்டல்கள், தனியார் மருத்துவமனைகள், அசோசியேசன் சார்பாக ஆரம்பிக்கிறவர்கள் மாநகராட்சிக்கு தகவல் கொடுத்து விட்டு ஆரம்பிக்கலாம். இதுவரை 28,005 பேர் சிகிச்சையில் உள்ளனர். தடுப்பூசி தற்போது அதிகமாக போட்டுக் கொள்கின்றனர். வேக்சின் 100 சதவீதம் பாதுகாப்பனது தான் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். மே 1ம் தேதி அனைவரும் தடுப்பூசி  போட்டுக் கொள்ளலாம். தனியார் மருத்துவமனையில் எவ்வளவு கட்டணம் வாங்க வேண்டும் என்று சுகாதாரத்துறை சார்பில் கண்காணிக்கப்படுகிறது.

21 ஆயிரம் தூய்மைப்பணியாளர்கள், டாக்டர்கள், செவிலியர்கள், காவல்துறையினருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது, யாருக்கும் பாதிப்பு இல்லை. சென்னையில் 13 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வியாசர்பாடியில் 2 சித்தா மையங்கள் ஆரம்பிக்க தயாராக உள்ளன. கபசுரக் குடிநீர் தொடர்ந்து வழங்கப்படுகிறது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் கபசுரகுடிநீர் வழங்கப்படுகிறது. 10 பேர் பாதிக்கப்பட்ட பகுதிகள் 153 தெருக்கள், 6 பேருக்கு மேல் பாதிப்பு 500 தெருக்களுக்கு மேல் உள்ளது. வீட்டுக் கண்காணிப்பில் இருப்பவர்கள் 12,533 பேர், கோவிட் கேர் சென்டரில் 1,719 பேர், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 12,185 பேர் உள்ளனர். அத்திப்பட்டில் 6 ஆயிரம் படுக்கைகள் உள்ளது. அங்கு 60 மருத்துவர்கள் வரை பணியில் இருப்பார்கள். இவ்வாறு மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறினார்.


Tags : Covid Center ,Prakash , Vaccine is 100 percent safe with 900 beds in the Covid Center: action to prepare another 10 thousand beds; Interview with Corporation Commissioner Prakash
× RELATED ஒன்றிய அரசுக்கு எதிரான சோனம் வாங்சுக்கின் போராட்டத்தில் பிரகாஷ் ராஜ்