18 வயது நிரம்பியவர்களுக்கு மே 1 முதல் போடும் நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசி விலை திடீர் உயர்வு

* மாநில அரசுகளுக்கு ரூ400, தனியாருக்கு ரூ600

* ஒரு டோஸ் ரூ250 முதல் ரூ450 வரை அதிகரிப்பு

* சீரம் நிறுவன அறிவிப்பால் அதிர்ச்சி

புதுடெல்லி: நாடு முழுவதும் மே 1ம் தேதி முதல் 18 வயது நிரம்பியவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ள நிலையில், ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை தயாரிக்கும் சீரம் நிறுவனம் நேற்று திடீரென விலையை உயர்த்தியது. மத்திய அரசுக்கு இதுவரை ரூ.150க்கு விற்கப்பட்டு வந்த கோவிஷீல்டின் விலை மாநில அரசுகளுக்கு ரூ.400 ஆகவும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஒரேநாளில், ரூ.250 முதல் ரூ.450 வரையில் அதிகரிக்கப்பட்ட இந்த விலை உயர்வால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் 2வது அலை பேயாட்டம் ஆடும் நிலையில், அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி போட வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இதனை ஏற்ற மத்திய அரசு வரும் மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. தற்போது, நடைமுறையில் உள்ளபடி 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசு தடுப்பூசி மையங்களில் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்றும், 18 முதல் 44 வயதுடையவர்கள் தனியார் மையங்களில் கட்டணம் செலுத்தி தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் எனவும் புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதே போல, தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள் 50% தடுப்பூசியை நேரடியாக மாநிலங்களுக்கும், தனியாருக்கும் வெளிச்சந்தையில் விற்பனை செய்யவும் மத்திய அரசு அனுமதி தந்துள்ளது.

நாடு முழுவதும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இதன் உற்பத்தியை பெருக்குவதற்காக தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களுக்கு முன்பணமாக ரூ.4,500 கோடியை மத்திய அரசு நேற்று முன்தினம் ஒதுக்கீடு செய்தது. இதன்மூலம், கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரிக்கும் சீரம் நிறுவனத்துக்கு ரூ.3 ஆயிரம் கோடியும், கோவாக்சின் தடுப்பூசியை தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு ரூ.1500 கோடியும் வழங்கப்படுகிறது. இதனால், தடுப்பூசி தட்டுப்பாடு நீங்கி உற்பத்தி பெருக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தடுப்பூசியை விலை உயர்த்தப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை உயரத்தும் அறிவிப்பை சீரம் நிறுவனம் நேற்று வெளியிட்டது.

இதன்படி, கோவிஷீல்டு தடுப்பூசி மாநில அரசுகளுக்கு இனி ஒரு டோஸ் ரூ.400க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 என்ற விலைக்கும் விற்பனை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. தற்போது, மத்திய அரசுக்கு ரூ.150க்கு ஒரு டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இவை தனியார் மருத்துவமனைகளில் ரூ.250க்கு போடப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசு மருத்துவமனைகளில் இலவசமாக போடப்படுகிறது. இந்த புதிய விலை உயர்வின் மூலம், ஒரேநாளில் ரூ.250 முதல் ரூ.450 வரை கோவிஷீல்டு தடுப்பூசி விலை உயர்த்தப்பட்டு உள்ளது. சீரம் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘எங்கள் தடுப்பூசி உற்பத்தியில் 50% மத்திய அரசின் தடுப்பூசி திட்டத்திற்கும், 50% மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் விநியோகம் செய்யப்படும்.

அரசு வழிகாட்டுதலின்படி, தடுப்பூசி மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் ரூ.400க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600க்கும் விற்பனை செய்யப்படும். அடுத்த 2 மாதங்களில் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம், தேவையான அளவு தடுப்பூசிகள் விநியோகிக்கப்படும். அதுவரை கார்ப்பரேட் மற்றும் தனியார் நிறுவனங்கள் அரசு இயந்திரங்கள் மற்றும் தனியார் சுகாதார அமைப்புகள் வாயிலாக தடுப்பூசியை பெற்றுக் கொள்ளலாம்,’ என கூறப்பட்டுள்ளது. தற்போது, மத்திய அரசுக்கு ரூ.150க்கு விற்கப்படும் தடுப்பூசி, இனிமேல் மாநில அரசுகளுக்கு ரூ.400 என விற்கப்பட உள்ளது. ரூ.400க்கு தடுப்பூசியை கொள்முதல் செய்யும் மாநில அரசுகள் அவற்றை மக்களுக்கு இலவசமாக தருவார்களா?

அல்லது மானியம் வழங்குவார்களா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற சில மாநில அரசுகள் மட்டுமே தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என அமைச்சரவையில் முடிவு எடுத்துள்ளன. பெரும்பாலான மாநில அரசுகள் எந்த வித அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, தடுப்பூசி போடுவதில் தற்போது ஆர்வமாக உள்ள மக்கள் இந்த விலை அறிவிப்பால் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். சீரம் நிறுவனத்தை தொடர்ந்து, கோவாக்சின் தடுப்பூசியை தயாரிக்கும்  பாரத் பயோடெக் நிறுவனமும் விலையை உயர்த்துமா என்ற அச்சம் நிலவுகிறது.

பணமதிப்பிழப்புக்கு சற்றும் சளைத்ததல்ல

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது டிவிட்டரில், ‘மத்திய அரசின் தடுப்பூசி கொள்கையானது பணமதிப்பிழப்பிற்கு சற்றும் சளைத்தல்ல. சாமானிய மக்கள் வரிசையில் நிற்கிறார்கள், உடல் நலம், சுகாதாரம் மற்றும் உயிரையும் இழக்கிறார்கள், இறுதியில் சில பெரிய தொழிலதிபர்கள் மட்டும் பயனடைகிறார்கள்,’ என கூறி உள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அளித்த பேட்டியில், ‘‘தடுப்பூசி தட்டுப்பாடுக்கு மத்திய அரசு தான் பொறுப்பு. இந்தியர்களுக்கு ஏன் அரசு முன்னுரிமை தரவில்லை. நாட்டை விட பிரதமருக்கு சுய விளம்பரம் மேலாகி விட்டதா? இங்கு தடுப்பூசியே இல்லாத நிலையில், 6 கோடி தடுப்பூசியை வெளிநாடுகளுக்கு தந்துள்ளனர்.

18-45 வயதுடையவர்களுக்கு உங்களால் ஏன் இலவசமாக தடுப்பூசி தர முடியவில்லை? புதிய வைரஸ்கள் இளைஞர்களைதான் அதிகம் தாக்குகின்றன. அப்படியிருக்கையில் எந்த விலை கட்டுப்பாடும் இல்லாமல் இடைத்தரகர்களை அனுமதிப்பது ஏன்? இது அரசின் இழிவான தோல்வி. இதற்கும் ஜவகர்லால் நேரு மீது குற்றம் சுமத்தாதீர்கள். இப்போது ஆட்சியில் இருப்பது பிரதமர் மோடி, அவர்தான் மக்களை காக்க வேண்டும்’’ என்றார்.

மருந்துகடைகளில் எப்போது விற்பனை?

சீரம் நிறுவன அறிக்கையில், ‘அடுத்த 4-5 மாதங்களில் சில்லறை விற்பனையிலும், தடையில்லா வணிகமும் செய்யப்படும்,’ என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்னும் 4-5 மாதத்தில் மருந்து கடைகளிலும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் கிடைக்கப் பெறும்.

வெளிநாடுகளை விட மிகவும் குறைவுதான்

சீரம் நிறுவனம் தனது விலை நிர்ணயத்தை நியாயப்படுத்தும் வகையில், அமெரிக்காவில் உள்ள தடுப்பூசிகளின் விலையோடு ஒப்பிட்டு கூறியுள்ளது. அதன் அறிக்கையில், ‘உலக நாடுகளின் தடுப்பூசியோடு ஒப்பிடுகையில், நமது தடுப்பூசி விலை மலிவானதாக இருப்பதை நாங்கள் உறுதிபடுத்தி உள்ளோம். அமெரிக்க தடுப்பூசிகள் தனியார் சந்தையில் ஒரு டோஸ் ரூ.1500க்கு அதிகமாகவும், ரஷ்யா மற்றும் சீனா தடுப்பூசிகள் ஒரு டோஸ் ரூ.750க்கு அதிகமாகவும் விற்கப்படுகின்றன,’ என கூறி உள்ளது.

ஒரே நாடு, ஒரே விலை

சீரம் நிறுவனத்தின் தடுப்பூசி விலை டிவிட்டரில் நேற்று பல்வேறு விவாதத்தை முன்னெடுத்தது. இந்த விலை நிர்ணயத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கடும் அதிருப்தி தெரிவித்தனர். இதனால் தேசிய அளவில் இது டிரெண்ட் ஆனது. காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டர் பதிவில், ‘கோவிஷீல்டு தடுப்பூசியை மத்திய அரசு ரூ.150க்கும் மாநில அரசுகள் ரூ.400க்கும் வாங்கப் போகிறது. இது கூட்டாட்சி ஒத்துழைப்பு அல்லவே. இது ஏற்கனவே தள்ளாடிக் கொண்டிருக்கும் மாநில அரசின் நிதியை துடைத்து காலி ஆக்கிவிடும். ரொம்ப கொடூரம். மத்திய, மாநில அரசுகளுக்கு ஒரே மாதியான ‘ஒரே நாடு ஒரே விலை’தான் எங்கள் தேவை,’ என கூறி உள்ளார்.

Related Stories: