கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம்: ஏலத் தோட்ட தொழிலாளர்கள் மறியல்

கம்பம்: கம்பம் மெட்டு வழியாக கேரளாவுக்கு செல்லும் ஏலத்தோட்ட தொழிலாளர்களிடம், கொரோனா பரிசோதனை சான்றிதழ் இல்லாததால் கேரள போலீசார் திருப்பி அனுப்பினர். இதை கண்டித்து கம்பத்தில் இன்று காலை தோட்டத் தொழிலாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம் கம்பம் மற்றும் சுற்றியுள்ள கிராம, நகரப் பகுதிகளிலிருந்து தினமும் 800க்கும் மேற்பட்ட ஜீப்புகளில் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் கேரளப் பகுதிகளான குமுளி, சக்குபள்ளம், வண்டன்மேடு, நெடுங்கண்டம், மாலி, கட்டப்பனை, கம்பம் மெட்டு பகுதிகளிலுள்ள ஏலத் தோட்டங்களுக்கு கூலி வேலைக்கு சென்று திரும்புகின்றனர்.

தற்போது கொரோனா 2ம் அலை பரவி வருவதால் மாநிலம் விட்டு மாநிலம் செல்ல மீண்டும் இ-பாஸ் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தேனி மாவட்ட எல்லைப்பகுதியான கம்பம் மெட்டு, போடி மெட்டு, குமுளி பகுதி வழியாக கேரளா செல்லும் தோட்டத் தொழிலாளர்கள் 6 மாத கால இ-பாஸ் பெற்று, கடந்த ஒரு வாரமாக கேரள தோட்டங்களுக்கு வேலைக்குச் சென்று வருகின்றனர். இந்நிலையில், கம்பம் மெட்டு எல்லைப் பகுதியில் இ-பாசுடன், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதற்கான சான்றிதழும் இருந்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் எனக் கூறி பஸ், கார், பைக்குகளில் சென்றவர்களை நேற்று கேரள போலீசார் திருப்பி அனுப்பினர்.

இன்று காலை கம்பம் மெட்டு கேரள போலீஸ் சோதனைச்சாவடியில், கேரளா சென்ற தோட்டத் தொழிலாளர்களையும், கொரோனா பரிசோதனைச் சான்றிதழ் இல்லை எனக் கூறி,  திருப்பி அனுப்பி உள்ளனர். இதனால் திரும்பி கம்பம் வந்த தொழிலாளர்கள், கம்பம் மெட்டு சாலை சிலுவைக்கோவில் அருகே பைபாஸ் ரோடு சந்திப்பில் வாகனங்களை நிறுத்தி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உத்தமபாளைம் டிஎஸ்பி சின்னக்கண்ணு உத்தரவில் சம்பவ இடத்துக்கு வந்த கம்பம் வடக்கு போலீசார், தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கேரள போலீசார் முன்னறிவிப்பின்றி சான்றிதழ் கேட்பதால் கொடுக்க முடியவில்லை என தொழிலாளர்கள் கூறினர். இதையடுத்து கேரள போலீசாருடன், தமிழக போலீசார் பேசினர். இதில் நாளை முதல் மருத்துவ பரிசோதனை சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் என்று எச்சரிக்கை விடுத்த கேரள போலீசார், இன்று ஒருநாள் மட்டும் சான்றிதழ் இல்லாமல் செல்ல அனுமதி கொடுத்தனர். ஏலத் தோட்ட தொழிலாளர்களின் திடீர் மறியலால் இன்று காலை கம்பம் புறவழிச்சாலை சிலுவைக்கோவில் அருகே சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக  போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  

இது குறித்து கேரள போலீசார் கூறுகையில், ‘‘கம்பம் மெட்டு கருணாபுரம் பகுதி, கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கம்பம் மெட்டு வழியாக தமிழகத்தில் இருந்து கேரளா செல்பவர்கள் அனைவரும், கொரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று எங்கள் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது’’ என்று தெரிவித்தனர்.

ஏலத் தோட்ட தொழிலாளர்கள் கூறுகையில், ‘‘கொரோனா பரிசோதனை சான்றிதழ் பெறுவதில் நடைமுறை சிக்கல் உள்ளது. இன்று டெஸ்ட் எடுத்தால், 3 நாட்கள் கழித்து ரிசல்ட் வருகிறது. ரிசல்ட் வரும் வரை நாங்கள் வேலைக்கு செல்ல முடியாது. எனவே இந்த பிரச்னை குறித்து தேனி மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களின் கலெக்டர்கள் பேசி, எங்களுக்கு நல்ல முடிவு எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories:

>