கேரளாவில் இருந்து 30 வழியில் ஊடுருவுகின்றனர் குமரியில் கூடுதல் செக்போஸ்ட் அமைக்கப்படுமா?... கொரோனா பீதியில் மக்கள்

களியக்காவிளை: குமரி- கேரள எல்லை பகுதியில் போலீஸ் கெடுபிடி அதிகரித்தும் இபாஸ் இல்லாமல் கேரள பயணிகள் மாற்றுபாதை வழியாக குமரிக்கு நுழைந்து விடுகின்றனர். இதனால் குமரியில் மேலும் கொரோனா பரவும் அச்சம் எழுந்துள்ளது. கொரோனாவின் 2வது அலை தமிழகம் மற்றும் கேரளாவில் நாளுக்கு நாள் தீவிரம் காட்டி வருகிறது. இந்தநிலையில் தமிழக அரசு 3 நாட்களுக்கு முன் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று உத்தரவிட்டது. அதுபோன்று மாநில எல்லையை கடந்து வருகிறவர்களுக்கு சளி பரிசோதனை நடத்திய பின்பு தான் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவித்தது.

இதையடுத்து களியக்காவிளை செக்போஸ்டில் போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டனர். அதன் அருகே உள்ள சிறப்பு கவுன்டர்களில் இபாஸ் என்ட்ரி செய்யும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதுதவிர அப்பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் சளி பரிசோதனை நடத்த முகாமும் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி கேரளாவில் இருந்து நடந்தோ, வாகனங்கள் மூலமோ வரும் அனைவருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டன. கடந்த 2 நாட்களாக கட்டுப்பாடு அதிகரித்து இருந்தும் தற்போதும் கேரளாவில் இருந்து வரும் பெரும்பாலான வாகனங்கள் இபாஸ் எடுக்காமல் வருவது கண்டுபிடிக்கப்படுகிறது.

இதனால் சோதனை சாவடி போலீசார் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர். இதையடுத்து இபாஸ் இல்லாத வாகனங்களை திருப்பி அனுப்பினர். இருப்பினும் சில வாகனங்கள் போலீஸ் கண்ணில் இருந்து தப்பி மாவட்டத்திற்குள் நுழைந்து விடுகின்றன. பாறசாலையில் இருந்து மாற்று பாதை வழியாக கேரள பயணிகள் குமரி மாவட்டத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். குமரி- கேரள எல்லை பகுதியில் 30க்கும் மேற்பட்ட இணைப்பு சாலைகள் உள்ள நிலையில், 12 செக் போஸ்ட்களில் மட்டுமே போலீசார் மற்றும் சுகாதார துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.  

மற்ற சாலைகளில் தடுப்பு எதுவும் இல்லாததால் அந்த வழியாக குமரிக்கு கேரள பயணிகள் சுலபமாக நுழைகின்றனர். எனவே குமரி- கேரள எல்லையில் உள்ள அனைத்து பாதைகளிலும் கூடுதல் செக்போஸ்ட் அமைக்க வேண்டும். இல்லையெனில் குமரியில் கொரோனாவின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என எல்லை மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

குளச்சலில் அபராதம் வசூலிப்பு

குளச்சல் நகராட்சி ஆணையர்(பொறுப்பு) நாட்ராஜன் உத்தரவுபடி, பொதுப்பணி மேற்பார்வையாளர் பிரம்மசக்தி, சுகாதார பணிகள் மேற்பார்வையாளர்கள் மணி, பெர்க்மான்ஸ், ராதாகிருஷ்ணன் மற்றும் ஊழியர்கள் குளச்சல் அண்ணா சாலை சந்திப்பில் நேற்று முககவசம் சோதனை நடத்தினர். அப்போது நடந்து வந்தவர்கள் மற்றும் வாகனங்களில் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

இந்த சமயத்தில் அந்த வழியாக உடையார்விளை அரசு குடோனில் இருந்து ரேஷன் கடைக்கு அரிசி ஏற்றி கொண்டு லாரி ஒன்று வந்தது. அந்த லாரியின் முன்பகுதியில் இருந்த 4 பேரில் 2 பேர் முககவசம் அணியாமல் இருந்தனர். இதனை கண்ட அதிகாரிகள் லாரியை நிறுத்தி 2 பேருக்கு அபராதம் விதித்தனர். இதுபோல் தொடர்ந்து நடந்த சோதனையில் மொத்தம் 10 பேருக்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்பட்டது..

Related Stories: