‘பவுலர்கள் சிறப்பாக பந்து வீசினர்’: டெல்லி கேப்டன் ரிஷப் பன்ட் மகிழ்ச்சி

சென்னை: நடப்பு ஐபிஎல் டி20 தொடரில் சென்னையில் நேற்று நடந்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸ் அணியை வீழ்த்தியது. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, பேட்டிங்கை தேர்வு செய்தார். துவக்க ஆட்டக்காரராக அவரும், டி காக்கும் இறங்கினர். 3வது ஓவரிலேயே டி காக் (2 ரன்கள்), ஸ்டோனிஸ் வீசிய பந்தில், பன்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர் ரோஹித் ஷர்மாவும், சூர்யகுமாரும் அதிரடியாக ஆடினர். இதனால் 6.5 ஓவர்களில் 67 ரன்கள் என்ற வலுவான நிலையில் மும்பை இருந்தது. அடுத்த பந்தில் சூர்யகுமார் (24 ரன்கள்) ஆட்டமிழந்தார். 9வது ஓவரில் ரோஹித் ஷர்மாவும் (44 ரன்கள்) வெளியேறினார்.

அதன் பின்னர் காட்சி மாறியது. டெல்லி பவுலர்கள் ஆதிக்கம் செலுத்தினர். குறிப்பாக அமித்மிஸ்ரா கலக்கினார். 4 ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே கொடுத்த அவர், 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரோஹித் ஷர்மா, இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா மற்றும் போலார்ட் என மும்பை அணியின் வலுவான பேட்டிங்கை அடியோடு தகர்த்தார். இதனால் மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்களில் சுருண்டது.

138 ரன்களை துரத்திய டெல்லி அணியின் பேட்ஸ்மென்கள் நிதானமாக ஆடினர். தவான் 45 ரன்கள், ஸ்மித் 33 ரன்கள் மற்றும் லலித் யாதவ் 22 ரன்கள் எடுத்தனர். டெல்லி அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 138 ரன்களை எடுத்து, இப்போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பன்ட் கூறுகையில், ‘‘போட்டி துவங்கிய போது சற்று பதற்றத்தில் இருந்தோம். ஆனால் சிறிது நேரத்திலேயே அமித் மிஸ்ரா, ஆட்டத்தை எங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டார்.

 எங்கள் அணியின் பவுலர்கள் சிறப்பாக பந்து வீசி, 136 ரன்களில் மும்பையை கட்டுப்படுத்தி விட்டனர். லலித் யாதவ் குறைவான ரன்களை கொடுத்து க்ருணால் பாண்ட்யாவின் விக்கெட்டை வீழ்த்தினார். பேட்டிங்கிலும் கை கொடுத்தார்.  கைவசம் விக்கெட்டுகள் இருந்தால், எந்த இலக்கையும் துரத்தி வெற்றி பெறலாம் என்பதை இப்போட்டியில் நான் கற்றுக் கொண்டேன்’’ என்று தெரிவித்தார்.

மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா கூறுகையில், ‘‘மிடில் ஓவர்களில் நாங்கள் நன்றாக பேட் செய்திருக்க வேண்டும். எங்கள் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து விட்டனர். ஆனால் டெல்லி அணி பவுலர்களின் திறமையான பந்துவீச்சை நான் பாராட்டுகிறேன். ஒரு சிறப்பான துவக்கத்திற்கு பின்னர், ரன்களை நாங்கள் குவிக்கத் தவறி விட்டோம். மொத்தத்தில் இன்று எங்களுடைய ஆட்டம் சிறப்பாக இல்லை என்பது உண்மை’’ என்று தெரிவித்தார்.

Related Stories: