அரசு, தனியார் மருந்துவமனைகள் நிரம்பி வழிவதால் விழி பிதுங்கும் பாஜகவின் ‘குஜராத் மாடல்’...வீட்டில் இருந்து கட்டிலுடன் வரும் நோயாளிகள்

ராஜ்கோட்: பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதால், நோயாளிகள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். குஜராத் மாநிலத்தில் கொரோனா பரவல் மோசமடைந்து வருவதால் இங்குள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கான படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ராஜ்கோட்டில் உள்ள அரசு மருந்துவமனை நிரம்பி வழிவதால், நேற்று அப்பகுதியில் உள்ள சவுத்ரி மைதானத்தில் 100க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மற்றும் தனியார் வாகனங்களில் நோயாளிகள் காக்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்றிரவு வரை பல நோயாளிகளுக்கு மருத்துவமனையில் அனுமதி கிடைக்காததல், திறந்தவெளியில் படுத்திருந்தனர். சிலர் தங்களது வீட்டிலிருந்து படுக்கைகளைக் கொண்டு வந்து நோயாளிகளை அதில் படுக்கவைத்து கவனித்து வந்தனர்.

பலரை தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து நோயாளி ராஜி என்பவரின் சகோதரி கூறுகையில், ‘நோயாளிகள் நீண்ட நேரம் ஆட்டோவில் உட்கார முடியாது. மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லை. அதனால், வீட்டிலிருந்து ஒரு கட்டிலை கொண்டு வந்துள்ளோம். திறந்தவெளியில் அப்படியே சிகிச்சை மருத்துவரை அணுகியுள்ளோம்’ என்றார். இன்னும் பல நோயாளிகள் ஆக்சிஜன் பாட்டில்களுடன், சவுத்ரி மைதானத்தில் தங்கியுள்ளனர். ஆக்சிஜன் பாட்டில்கள் பொருத்தப்பட்ட நோயாளிகள் தனியார் வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களில் கொண்டு வரப்பட்டவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் தனியார் மருத்துவமனைகளில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டவர்கள் ஆவர்.

சாதாரண மக்களுக்கு ஆக்சிஜன் பாட்டில்கள் கிடைப்பது மிகவும் கடினமான சூழ்நிலையாக மாறியுள்ள நிலையில், மருத்துவமனையில் காலி படுக்கைகள் இல்லை, மருத்துவ வசதிகள் இல்லை என்ற புகார்கள் அதிகரித்துள்ளன. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலத்தில் மருத்துவ கட்டமைப்புகளின் குறைபாடுகளால் தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். நாட்டிற்கே முன் உதாரணமாக ‘குஜராத் மாடல்’ என்று கூறி பெருமை கொள்ளும் பாஜக, தற்போது தங்களது ஆளும் மாநிலத்தில் மருத்துவ வசதிகள் இல்லாமல் மக்கள் படும் துன்பங்களை பார்த்து பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Related Stories:

>