சின்னாளபட்டியில் திறந்தவெளி கழிப்பிடமான செக்காபட்டி சாலை-பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு

சின்னாளபட்டி : சின்னாளபட்டியில் செக்காபட்டி-சிக்கனம்பட்டி சாலை திறந்தவெளி கழிப்பிடமாக மாறியதால் பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் 6, 7, 8வது வார்டு மற்றும் 9, 14, 16, 17, 18வது வார்டுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் வாறுகால் வழியாக செக்காபட்டிக்கு வந்து சிக்கனம்பட்டி குளம் வரை செல்கிறது. இந்நிலையில், செக்காபட்டியிலிருந்து சிக்கனம்பட்டி வரை உள்ள வாறுகால்களை தூர்வாராததால், கழிவுநீர் சாலையில் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. வாறுகால்கள் முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள் நிரம்பியுள்ளன. இதனால், சிறுமழை பெய்தால் கூட வீடுகளுக்குள் கழிவுநீர் புகுகிறது.

இதனால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன. வாறுகால்களில் மலைபோல் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக்  கழிவுகளால் நிலத்தடி நீர் மாசுபடுவதோடு,  மண்வளமும் கெட்டுவிடும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே, பேரூராட்சி நிர்வாகம் பொக்லைன் இயந்திரம் மூலம் செக்காபட்டி-சிக்கனம்பட்டி வரை செல்லும் கழிவுநீர் வாறுகாலை தூர்வார வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More
>