ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு எதிரொலி பல்லடம் பகுதி பண்ணைகளில் 5 லட்சம் காடை குஞ்சு தேக்கம்-ஊரடங்கில் தளர்வு அளிக்க கோரிக்கை

பொங்கலூர் : ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவித்ததால் பல்லடம் பகுதி பண்ணைகளில் 5 லட்சம் காடை குஞ்சு தேக்கமடைந்துள்ளது. இதனால் பண்ணையாளர்கள் நஷ்டத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் பொங்கலூர் சுற்றுவட்டார பகுதியில் கறிக்கோழி வளர்ப்பு மற்றும் காடை வளர்ப்பு தொழிலில் இப்பகுதி விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது.

 

இதன் எதிரொலியாக பல்லடம் மற்றும் பொங்கலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பண்ணைகளில் சுமார் 5 லட்சம் காடை குஞ்சுகள் கேட்பாரின்றி தேங்கி உள்ளதாக பண்ணையாளர்கள் வேதனையுடன் கூறுகின்றனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதி பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் காடை குஞ்சுகள் இறைச்சிக்காக அண்டை மாநிலமான கேரளா மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள இறைச்சிக் கடைகளுக்கு வியாபாரிகள் வாங்கி செல்வர்.

25 முதல் 30 நாட்களில் இறைச்சிக்கு தயாராகி விடும் காடை குஞ்சுகள் ஒவ்வொன்றும் சுமார் 200 முதல் 250 கிராம் வரை எடையுடன் இருக்கும்.

தற்போது தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்தி உள்ளதால் 30 நாட்களுக்கு மேல் ஆன காடை குஞ்சுகளை இறைச்சிக்காக வாங்க ஆளில்லாமல் பண்ணைகளில் சுமார் 5 லட்சம் காடை குஞ்சுகள் தேக்கம் அடைந்து விட்டது. இறைச்சிக்காக உற்பத்தி செய்யப்பட்ட காடை குஞ்சுகளை விற்றே ஆக வேண்டும். இல்லாவிட்டால் அவை தானாகவே அழிந்துவிடும் என்பதால் என்ன செய்வது என அறியாமல் இப்பகுதி விவசாயிகள் திகைப்பில் ஆழ்ந்துள்ளனர்.

எனவே வரும் நாட்களில் ஊரடங்கு சட்டத்தில் தளர்வை ஏற்படுத்தி ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை இறைச்சி கடைகளை திறக்க அனுமதித்தால் மட்டுமே பண்ணைகளில் தேங்கியுள்ள காடை குஞ்சுகளை இறைச்சிக்காக விற்க முடியும். இல்லாவிட்டால் பண்ணையாளர்கள் பெருத்த நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories:

More
>