×

பிரபல தனியார் மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்காததால் கொரோனா நோயாளி தற்கொலை: உறவினர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: குரோம்பேட்டை அஸ்தினாபுரம் பகுதியை சேர்ந்தவர் ரங்கா (57), பொக்லைன் இயந்திர ஓட்டுனர். இவருக்கு சாந்தி என்ற மனைவியும், தனசேகரன் (25), தமிழ்ச்செல்வன் (23) என்ற மகன்களும் உள்ளனர். கடந்த வாரம் காய்ச்சலால் அவதிப்பட்ட ரங்கா மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால், கேளம்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் கடந்த 16ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கிருந்து நேற்று முன்தினம் ரங்கா செல்போனில் தனது மகன் தனசேகரனை தொடர்புகொண்டு, ‘‘எனக்கு சிகிச்சை எதுவும் அளிக்கப்படவில்லை. காலை, மாலை ஆகிய இரு வேளைகளில் பாரசிட்டமல் மாத்திரைகள் இரண்டு மட்டும் அளிக்கப்படுகிறது. உணவும் தரமற்று இருக்கிறது’’ என்று வருத்தத்துடன் கூறி உள்ளார். இந்நிலையில், நேற்று காலை மருத்துவமனை வராண்டா பகுதியை சுத்தம் செய்ய வந்த ஊழியர்கள் நோயாளி ரங்கா வராண்டா ஜன்னலில் தூக்குப் போட்டு சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர். மேலும், கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து விசாரணை மேற்கொண்டனர்.

கொரோனா நோயாளி ரங்கா எதற்காக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கொரோனா சிகிச்சை முறையாக அளிக்காதது காரணமா அல்லது மன உளைச்சல் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரது உடல் மறைமலைநகரில் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில், இது சம்பந்தமாக கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வந்த ரங்காவின் மனைவி, மகன்கள், உறவினர்கள், மருத்துவமனையில் தொடக்கத்தில் இருந்தே முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என்றும், பணம் கட்ட சொல்லி தொந்தரவு செய்தனர், என்றும் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது பரபரப்பு குற்றம் சாட்டினர்.

Tags : Corona , Corona patient commits suicide for failing to receive proper treatment at popular private hospital
× RELATED கொரோனாவால் 4 ஆண்டு நிறுத்தப்பட்ட...