கொரோனா பிரச்னை முடிவுக்கு வரும் வரை தமிழகம் முழுவதும் ஆம்னி பஸ்கள் ஓடாது: உரிமையாளர் சங்கம் திடீர் முடிவு

சென்னை: கொரோனா பிரச்னை முடிவுக்கு வரும் வரை தமிழகத்தில் இன்று முதல் ஆம்னி பஸ்கள் ஓடாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதுகுறித்து, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் ஜெயம் பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது: ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க செயற்குழு கூட்டம் சென்னையில் நடத்தப்பட்டது. இதில் ஒருமித்த கருத்தாக கொரோனா பிரச்னை முடிவுக்கு வரும் வரையில், அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் அனைத்து ஆம்னி பஸ்களை நிறுத்துவது என ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. பகலில் ஆம்னி பஸ்களை இயக்க முடியாது என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளோம்.

2000 பஸ்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது வெறும் 800 பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தது. அதையும் இன்று முதல் நிறுத்தி வைக்க முடிவெடுத்துள்ளோம். ஏற்கனவே அரசுக்கு வரியை செலுத்திவிட்டோம். ஆம்னி பஸ்களை பொறுத்தவரை வரி கட்டிவிட்டுத் தான் இயக்குவோம். எனவே 23 நாட்களுக்கு உண்டான வரியை அரசு தள்ளுபடி செய்து மீண்டும் எங்களிடம் தர வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம். சங்கத்தில் இல்லாத சில உரிமையாளர்கள் மட்டுமே பஸ்சை இயக்குவோம் என்று கூறியுள்ளனர். எங்கள் சங்கத்தில் சின்ன சின்ன உரிமையாளர்கள் உட்பட மற்ற மாநிலங்களை சேர்ந்த பெரிய உரிமையாளர்களும் தான் உறுப்பினர்களாக உள்ளனர். எங்கள் சங்கம் தான் முதன்மையான சங்கம். எனவே ஆம்னி பஸ்கள் இன்று முதல் ஓடாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.  இவ்வாறு அவர் கூறினார்.

* மாறுபட்ட தகவலால் பயணிகள் குழப்பம்

தமிழகத்தில் இன்று முதல் ஆம்னி பஸ்கள் ஓடாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்த நிலையில், மற்றொரு சங்கமான பேருந்து உரிமையாளர் சங்கம் பகலில் ஆம்னி பேருந்துகளை இயக்குவோம் என்று அறிவித்திருப்பது பயணிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் அப்சல் கூறுகையில்,‘‘ தற்போதைய சூழலில் 20 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கி வருகிறோம். எந்த சர்வீசையும் ‘கட்’ பண்ணவில்லை. இரவில் புக் செய்தவர்கள் பகலில் பயணம் செய்யும் வகையில் பேருந்துகளை இயக்கிக் கொண்டிருக்கிறோம்’’ என்றார்.

Related Stories:

>