‘ஸ்டிராங் ரூம்’ அருகே மர்ம நபர்கள்..! வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் ஆணையம் சரியாக கையாளவில்லை: கமல்ஹாசன் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து புகார் மனு அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

‘ஸ்டிராங் ரூம்’ என்பது உண்மையான ‘ஸ்டிராங் ரூம்’மாக இருக்க வேண்டும். சிசிடிவி கேமராக்கள் அடிக்கடி செயலிழந்து விடுவதும், மர்ம கன்டெய்னர்கள் நள்ளிரவில் வளாகங்களுக்குள் நுழைவதும், திடீர் திடீரென வைபை வசதிகள் வளாகங்களுக்குள் உருவாகுவது, லேப்டாப்புடன் மர்ம நபர்கள் ‘ஸ்டிராங் ரூம்’ அருகே நடமாடுவதும் பல்வேறுவிதமான கேள்விகளை எழுப்புகிறது.

தேர்தல் முறையாக நடத்தப்பட்டு முடிவுகள் நேர்மையாக அறிவிக்கப்படுகின்றன என்ற நம்பிக்கையை வாக்காளர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் உருவாக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. வாக்காளர் பட்டியல் குளறுபடிகளையும் புகாராக அளித்திருக்கிறோம். இது முதல் கட்டம்தான். இன்னும் நிறைய புகார்கள் எங்களுக்கு வந்தவண்ணம் உள்ளது. அவைகளையும் திரட்டி, இங்கே கொண்டு வந்து அவர்கள் பார்வைக்கு வைக்க இருக்கிறோம். பல விஷயங்கள் மர்மமாக நடக்கின்றன. பல வாகனங்கள் இரவு நேரங்களில் வாக்கு இயந்திரம் உள்ள மையங்களுக்குள் புகுவதும், ஸ்கூட்டரில் வாக்குப்பதிவு இயந்திரம் போனதற்கான ஆதாரங்கள் அனைவருக்கும் தெரியும்.

அந்த மாதிரி வாக்குப்பதிவு இயந்திரம் என்பது, கண்டவர்கள் கையிலும் நடமாடுகிறது. இது முதல் முறை அல்ல, இதற்கு முன்பாகவும் பல தேர்தலில் நடந்திருக்கிறது. ஆக, மிஷின் நல்லதாக இருந்தாலும் அது கண்டவர்கள் கையில் இருப்பதுதான் சந்தேகமே. இப்போது முகமூடி வேறு அணிந்திருப்பதால் வசதியாக இருக்கிறது. வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாள்வதில் தேர்தல் ஆணையம் சரியாக செயல்படவில்லை என்று புகார் அளித்துள்ளோம். இதை எப்படி சரி செய்யலாம் என்பது குறித்த பரிந்துரையையும் நாங்கள் தேர்தல் ஆணையத்துக்கு சொல்லி இருக்கிறோம். சக நடிகர்கள் சைக்கிளில் வந்து வாக்களித்தாலும் சரி, முதலில் வந்து வாக்களித்தாலும் சரி, வந்து வாக்களித்ததில் எனக்கு சந்தோஷம்.

Related Stories:

>