×

கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து சார்பதிவாளர் அலுவலகத்தில் உடல் வெப்ப பரிசோதனை செய்த பிறகே மக்கள் அனுமதி: இணை நோய் உள்ள அலுவலர்களை பதிவில்லா பணி

சென்னை: கொரோனா தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து சார்பதிவாளர் அலுவலகத்தில் உடல் வெப்ப பரிசோதனை செய்த பிறகே பொதுமக்களை அனுமதிக்க வேண்டும். கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து வரும் நபரின் பதிவை நிராகரிக்கலாம். கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தை தற்காலிக இடமாற்றம் செய்ய பதிவுத்துறை ஐஜி சங்கர் அனைத்து சார்பதிவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இது குறித்து பதிவுத்துறை ஐஜி சங்கர் அனைத்து சார்பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

* பொதுமக்களின்  உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்த பின்பு தான் அலுவலகத்தினுள் அனுமதிக்க வேண்டும்.

* பொதுமக்கள் நிற்கும் இடத்தில் உரிய கட்டங்கள் குறியிடவும், காத்திருப்பதற்கு போதிய சமூக இடைவெளி (4அடி முதல் 6 அடி ) விட்டு வளையம் வரைந்து உட்காரும் இடத்தில் சமூக இடைவெளி விட்டு இருக்கைகள் அமைக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

* ஸ்டார் 2.0ன் இணையவழி சேவைகளான வழிகாட்டி மதிப்பு அறிதல், வில்லங்கசான்று வழங்குதல், சான்றிட்ட நகல்கள் வழங்குதல், திருமண சான்று போன்றவைகளை பெற இணையவழி சேவையை நன்கு பயன்படத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும். நுழைவுவாயிலில் ஒரு அலுவலரை அமர்த்தி பதிவுப்பணியின் அவசரத் தேவைக்கு மட்டுமே பதிவுப்பொதுமக்கள் வருகை தர அனுமதிக்க வேண்டும். இடைதரகர்கள் நடமாட்டத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

* அலுவலகத்தில் உள் நுழையும் அனைத்து பொதுமக்களின் பெயர், தொலைபேசி எண், உள்/வெளியே செல்லும் நேரம் ஆகியவற்றை தேதி வாரியாக குறிப்பிட்டு தனியே பதிவேடு பராமரிக்க வேண்டும்.

* பதிவுற்ற ஆவணங்கள் அன்றன்றே திரும்ப அளிக்கப்பட வேண்டும். அப்போது தான் பொதுமக்கள் மீண்டும் பதிவு அலுவலகத்திற்கு வருவது பெரிதும் தவிர்க்கப்படும். இதனால், ஒரே வருகையில் பதிவான ஆவணம் திரும்ப வழங்குதல் மூலம் 100 சதவீத இலக்கினை எட்ட இயலும்.

* ஆவணப்பதிவின் போது புகைப்படம் எடுக்கும் போது முகக்கவசத்தினை கழற்றிக்கொள்ளலாம்.

* பதிவுத்துறை தலைவரால் ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகம் நேரடியாக கண்காணிக்கப்படுவதை கருத்தில் கொண்டு டிஐஜிக்களால் மண்டல சார்பதிவாளர் அலுவலகங்களை கண்காணித்து பொதுமக்கள் கூட்டமாக உள்ள நிகழ்வுகளில் உரிய அறிவுரையினை சம்பந்தப்பட்ட சார்பதிவாளருக்கு வழங்கி அலுவலக வளாகத்திற்கு உள்ளேயும், வெளியேயும் கூட்டம் கூடுவதை முற்றிலும் தவிர்க்கவும் டிஐஜிக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

* பிஓஎஸ் இயந்திரம், விரல் ரேகை இயந்திரம், கணினி என கையாளப்படும் அனைத்திலும் பயன்படுத்தும் முன்பும், பின்பும் சானிடைசர் வைத்து சுத்தம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது. ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டவாறு பொதுமக்களுக்கும், பணியாளருக்கும் இடையே 2 மீட்டர் தூரம் இடைவெளி இருத்தல், ஆவணங்கள், சான்றிதழ்களை கையாள வேண்டிய நிகழ்வுகளில் கையுறைகள் அணிந்து கொள்ளல்,  அலுவலகத்தினை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல் ஆகியன கடைப்பிடிக்கப்படுதல் மிகவும் அவசியம்.

* ஏதேனும் அலுவலகத்தில் நோய் தொற்று ஏற்பட்டு கோவிட் 19 சோதனை செய்யப்படும் பட்சத்தில் கணினி தொகுப்பு பணியாளர்கள், ஐபி கேமரா பணியாளர் மற்றும் ஒளிருவருடல் செய்யும் பணியாளர்களுக்கு சேர்த்து சோதனை செய்ய வேண்டும்.

* மாவட்ட பதிவாளருக்கு நிலைக்கு கீழ் பணிபுரியும் 55 வயதுக்கு மேற்பட்ட பணியாளர்களின் இணை நோய் உள்ளவர்களை உரிய மருத்துவ சான்று பெற்றுக்கொண்டு பொதுமக்கள் தொடர்பில்லாத  பணியில் நியமிக்க டிஐஜிக்கள் அறிவுறுத்ப்படுகின்றனர்.

* தடை செய்யப்பட்ட பகுதி விவரங்களை மாவட்ட கலெக்டர்களிடம் இருந்து பெற்று ஆனவணத்தில் சம்பந்தப்பட்ட எந்த நபராவது கட்டுப்பாட்டு பகுதிகளை சேர்ந்தவராக இருப்பின் அந்த ஆவணத்தை பரிசீலிக்க தேவையில்லை. உரிய திருப்புச்சீட்டு வழங்கி பதிவினை நிராகரிக்கலாம்.

* கட்டுப்பாட்டு பகுதியில் சார்பதிவாளர் அலுவலகம் அமைந்திருப்பதின் தற்காலிக இடமாற்றம் செய்யலாம்.

* கட்டுப்பாட்டு பகுதியில் குடியிருப்பு உள்ள பணியாளரை அலுவலகத்தில் பணிபுரிய அனுமதிக்க கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Following the rising incidence of corona infection, the public is allowed to have a body heat test at the relative's office: Registration of officers with co-morbidities.
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...