சீரான மும்முனை மின்சாரம் வழங்காததால் 70,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரின்றி கருகும் அவலம்: அரக்கோணம், நெமிலியில் விவசாயிகள் வேதனை

நெமிலி: அரக்கோணம் மற்றும் நெமிலி சுற்றுவட்டாரத்தில் மும்முனை மின்சாரம் சீராக வழங்காததால் 70 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதித்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் மற்றும் நெமிலி ஆகிய தாலுகாக்களில்  பிரதானமாக தொழிலான நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. சித்திரை மாதத்தை முன்னிட்டு விவசாயிகள் நெல் சாகுபடி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், தமிழக அரசு சார்பில் மும்முனை மின்சாரம் விவசாயிகளுக்கு சீராக  வழங்குவதில்லையாம். மேலும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து கடந்த 1ம் தேதி முதல் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கப்படுமென தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். ஆனால் தற்போது வரை மும்முனை மின்சாரம் விவசாயிகளுக்கு முறையாக வழங்கப்படாததால், பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமலும், அறுவடை செய்த வயல்களில் தண்ணீர் பாய்ச்சி மீண்டும் விவசாயம் செய்ய முடியாமலும் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

அரக்கோணம், நெமிலி, பனப்பாக்கம், அசநெல்லிகுப்பம்,  சிறுவளையம், சயனபுரம், கீழ்வீதி, மகேந்திரவாடி ஆகிய  சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 70 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதுபோன்று தொடர்ந்து மும்னை மின்சாரம் இல்லாமலும் அடிக்கடி மின்வெட்டும் இருந்தால்  விவசாயம் முற்றிலும்  முடங்கும்  அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாநில மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>