நாகை மாவட்டத்தில் பதிவான வாக்கு இயந்திரம் உள்ள கட்டிடம் மீது பறந்த ட்ரோன்: சென்னையை சேர்ந்த 3 பேர் சிக்கினர்

நாகை: நாகை மாவட்டம் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாகை இஜிஎஸ் பிள்ளை இன்ஜினியரிங் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 3 ஷிப்ட்களாக ஒரு ஷிப்டுக்கு 80 போலீசார் வீதம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது தவிர மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையில் 150 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டிடத்தின் மீது ட்ரோன் கேமரா பறந்ததை அங்கிருந்த திமுக கூட்டணி கட்சி ஏஜென்டுகள் பார்த்தனர்.

சந்தேகமடைந்த அவர்கள் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அந்த ட்ரோன் கேமராவை சுட்டு வீழ்த்தி பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் அந்த ட்ரோன் கேமரா வளாகத்தின் உள்ளேயே விழுந்தது. போலீசார் அதை கைப்பற்றி உயரதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.  தகவல் அறிந்த  திமுக மற்றும் கூட்டணி கட்சியினர்அங்கு திரண்டனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைகளில் கண்காணிப்பு கேமரா செயல்படாமல் உள்ளது. தற்போது ட்ரோன் கேமரா பறக்க விடப்படுகிறது. இது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றுவதற்கான முயற்சி போல் தெரிகிறது என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த டிஎஸ்பி சரவணன் தலைமையிலான போலீசார் வந்து அனைவரையும் சமாதானம் செய்தனர்.

நாகை சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியும், நாகை ஆர்டிஓவுமான மணிவேல் தலைமையிலான குழுவினர் வந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் விசாரணை நடத்தினர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அனைத்து அறைகளிலும் சோதனை நடத்தப்பட்டது.  இது குறித்து வேட்பாளர்கள் சார்பில் கலெக்டர், எஸ்பி அலுவலகத்தில் புகார் செய்தனர்.  இதுதொடர்பாக ஏடிஎஸ்பி (சைபர்க்ரைம்) திருநாவுக்கரசு, ஆர்டிஓ மணிவேல் ஆகியோர் விசாரணை நடத்தியதில், சென்னையை சேர்ந்த குமார், சுரேஷ்குமார், பாலாஜி ஆகிய 3 பேர் அந்த கல்லூரி விளம்பரம் தொடர்பாக படம் எடுப்பதற்கு ட்ரோன் கேமராவை பறக்கவிட்டது தெரியவந்தது. எப்பொழுது அழைத்தாலும் விசாரணைக்கு வரவேண்டும் என  3 பேரையும் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Related Stories:

More
>