வாக்கு எண்ணிக்கை மையத்தில் 96 மர்ம காலி டிரங்க் பெட்டிகள்: தேனியில் பரபரப்பு

தேனி: தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, கம்பம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள தேனி கம்மவார் சங்க கல்வி நிறுவனத்தில்  வைக்கப்பட்டுள்ளன. மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த மையத்தில் அனுமதியின்றி வாகனங்கள் சென்று வந்ததாக நேற்று புகார் எழுந்தது. இதனையடுத்து, போடி தொகுதி திமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன், வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்து, நுழைவாயிலில் இருந்த போலீசாரிடம் இதுபற்றி கேள்வி எழுப்பினார். இதற்கு பாதுகாப்பு டிஎஸ்பிக்கள் முத்துராஜ், சையதுபாபு ஆகியோர், ‘‘தவறு எதுவும் நடக்கவில்லை’’ என பதில் அளித்தனர். இதையடுத்து வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

மையத்தை பார்வையிட்டு வந்த தங்கதமிழ்ச்செல்வன் கூறுகையில், வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் 2 போலீஸ் வாகனங்கள் செல்ல அனுமதி உள்ளது. இதில், ஒரு போலீஸ் வாகனம் மட்டும் சென்றது பதிவில் உள்ளது. மற்றொரு வாகனம் மையத்திற்குள் சென்றதை பதிவிடாமல் உள்ளனர். இதுகுறித்து கேட்டதற்கு, கடந்த 13ம் தேதி வந்த ஒரு வாகனம் வெளியே செல்லவில்லை என்கின்றனர். மற்றொரு வாகனம் வெளியே சென்றதை பதிவிடாமல் உள்ளனர். இதுகுறித்து விளக்கம் கேட்டுள்ளேன். வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் 2ம் தளத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ‘‘ஸ்ட்ராங் ரூம்’’ அருகே 96 காலி டிரங்க் பெட்டிகள் உள்ளன. ‘‘இவை எப்படி வந்தன’’ என கேட்டதற்கு, வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் இயந்திரங்களை எடுத்துச் செல்ல வைத்ததாக கூறுகின்றனர். இதை ஏற்க முடியாது என்றார்.

Related Stories:

>