தன் உயிரையும் பொருட்படுத்தாது குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு குவியும் பாராட்டுகள்: ரூ.50,000 வெகுமதி வழங்கி அதிகாரிகள் நெகிழ்ச்சி

மும்பை: தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை தனது உயிரை துச்சமென நினைத்து காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு பாராட்டு குவிகி்றது. மத்திய ரயில்வே மும்பை டிவிஷனில் உள்ள வாங்கனி ரயில் நிலையத்தில் பாயிண்ட்ஸ் மேன் ஆக பணியாற்றுபவர் மயூர் ஷெல்கே. கடந்த 17ம் தேதி இவர் பணியில் இருந்தபோது, பிளாட்பாரம் 2ல், பார்வையற்ற தனது தாயுடன் நடந்து சென்று கொண்டிருந்த 6 வயது குழந்தை, திடீரென நிலை தடுமாறி ரயில்வே டிராக்கில் விழுந்து விட்டது. அந்த நேரத்தில் புறநகர் ரயில் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. இதைப்பார்த்து பதறிய மயூர் ஷெல்கே, தண்டவாளத்தில் ஓடிச் சென்று அந்த குழந்தையை தூக்கிக் கொண்டு பிளாட்பாரத்தில் ஏறிவிட்டார். ரயில் வருவதற்கு ஒரு சில நொடிகளுக்குள் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றி விட்டார்.

கனப்பொழுது தாமதித்திருந்தால் கூட, இருவரும் ரயிலில் சிக்கி இறந்திருப்பார்கள். சிசிடிவியில் பதிவான இந்த காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதற்கு பொதுமக்கள் மட்டுமின்றி, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ரயில்வே அமைச்சகம் சார்பில் பாராட்டுக்கள் குவிந்தன. இவருக்கு ரயில்வே அமைச்சகம் ரூ.50,000 வெகுமதியை அறிவித்துள்ளது. மயூர் ஷெல்கேவுக்கு பாராட்டு சான்று வழங்கப்பட்டது. மயூர் கூறுகையில், ‘பார்வையற்ற அந்தப் பெண், தனது மகனுடன் வந்து கொண்டிருந்தார். குழந்தை தண்டவாளத்தில் விழுந்ததை பார்த்தேன். அந்த பெண்ணால் எதுவும் செய்ய முடியாது. இதனால் நான் உடனே குழந்தையை ஓடிச்சென்று காப்பாற்றினேன்,’ என தெரிவித்தார்.

Related Stories:

>