ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் இல்லாமல் வருடாந்திர வசந்த உற்சவம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருகிற 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை வருடாந்திர வசந்த உற்சவம் பக்தர்கள் இன்றி நடத்தப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர வசந்த உற்சவம் ஒவ்வொரு ஆண்டும்  சித்திரை மாதம் பவுர்ணமி அன்று நிறைவு பெறும் விதமாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு வருகிற 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி வருகிற 24, 25ம் தேதிகளில் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத மலையப்ப சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும்.

3வது நாளான 26ம் தேதி ஸ்ரீதேவி, பூதேவி, சமேத மலையப்ப சுவாமி மற்றும் சீதா, லட்சுமணர், சமேத கோதண்டராமர் மற்றும் ஆஞ்சநேயர், ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணருக்கு திருமஞ்சனம் நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் வசந்த மண்டபத்தில் இந்த உற்சவம் நடைபெறும். கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வசந்த உற்சவத்தின் 2வது நாளில் நடைபெறும் தங்க ரதம் வீதிஉலாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், 3 நாட்களும் கல்யாணம் உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை ஆகிய சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>