×

பாகிஸ்தானில் இருந்து படகில் கடத்தி வந்த ரூ.3,000 கோடி மதிப்பு ஹெராயின் பறிமுதல்: கேரள கடலில் வேட்டை

திருவனந்தபுரம்: பாகிஸ்தானில் இருந்து படகில் கடத்தி வரப்பட்ட ரூ.3,000 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள், கேரள கடலில் பறிமுதல் செய்யப்பட்டது. கேரள மாநிலம், கொச்சி அருகே அரபிக்கடலில் இந்திய கடற்படையினர் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, இலங்கையை சேர்ந்த மீன்பிடி படகு ஒன்று  சென்று  கொண்டிருந்தது. சந்தேகம் அடைந்த கடற்படையினர் அதை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 300 கிலோ ஹெராயின்  போதைப் பொருள் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.3 ஆயிரம் கோடி. பாகிஸ்தானில் உள்ள  மக்ரானில் இருந்து இது கடத்தி வரப்பட்டுள்ளது. இந்த போதை பொருளை இந்தியா, இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளில் விற்பனை செய்ய  திட்டமிட்டு  இருந்ததும் தெரியவந்தது. படகில் இருந்த இலங்கையை சேர்ந்த 5 பேரையும் கடற்படையினர் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

அதைத் தொடர்ந்து, படகு நேற்று மாலை கொச்சிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அந்த படகு, போதைப் பொருள், கைது செய்யப்பட்ட 5 பேர் போதைப் பொருள் தடுப்புத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை  நடந்து வருகிறது. 200 கிலோ கரை ஒதுங்கியது: சில மாதங்களுக்கு முன் திருவனந்தபுரம் அருகே மினிகோய் கடல் பகுதியில் 2 முறை போதை பொருட்கள், ஆயுதங்களுடன் இலங்கையை சேர்ந்த படகுகள் சிக்கின. இதில், முதலில் பிடிபட்ட படகில் இருந்த போதைப் பொருளை அதில் இருந்தவர்கள் கடலில் வீசினர். அவற்றை கைப்பற்றும் முயற்சி நடந்த போதிலும் இதுவரை கிடைக்கவில்லை. இந்நிலையில், அந்த 200 கிலோ போதைப்பொருள் மாலத்தீவு கடற்கரையில் கரை ஒதுங்கி உள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அதை இந்தியா கொண்டு வர  முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : Pakistan ,Kerala , Seizure of Rs 3,000 crore worth of heroin smuggled by boat from Pakistan: Hunting in Kerala waters
× RELATED மக்கள் தீர்ப்பை திருடிய அதிகாரிகள்...