×

கன்னியாகுமரியை சுற்றி பார்க்க தடை: சுற்றுலா பயணிகளை திருப்பி அனுப்பிய போலீஸ்; நங்கூரமிட்டு படகு நிறுத்தி வைப்பு

கன்னியாகுமரி: கொரோனா பரவை தடுக்கும் வகையில் சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதைடுத்து இன்று காலை கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகளை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அரசு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இன்று முதல் சுற்றுலாதலங்கள், கடற்கரைகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் இரவு 10 முதல் அதிகாலை 4 மணி வரை முழு ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரி கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து கன்னியாகுமரி போலீசார் ரவுண்டானா சந்திப்பில் ேபரிகார்டுகள் அமைத்து சுற்றுலா பயணிகளை தடுத்து நிறுத்தி வருகின்றனர். வழக்கம்போல் இன்று காலை குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் சூரிய உதயத்தை காண வந்த ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இதேபோல் கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்த கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. இதனால் எப்போதும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி பரபரப்புடன் காணப்படும் திரிவேணி சங்கமம் கடற்கரை, கடற்கரை சாலை உள்ளிட்ட முக்கிய இடங்கள் சுற்றுலா பயணிகளின் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. அதைத் தொடர்ந்து கடல்நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை சுற்றுலா பயணிகள் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு மூலம் சென்று கண்டு களித்து மகிழ்வது வழக்கம்.

ஆனால் இன்று முதல் படகு சேவையும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்துக்கு படகுகள் படகணையும் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான அறிவிப்பு பலை பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக நுழைவு வாயில் பகுதியில்  வைக்கப்பட்டு உள்ளது. அதில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே மறு உத்தரவு வரும் வரை படகு சேவை ரத்து செய்யப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இதேேபால் கன்னியாகுமரி அரசு பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்காவும் இன்று  முதல் அடைக்கப்பட்டுள்ளது. அரசு மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா  பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.



Tags : Kanyakumari , Prohibition to look around Kanyakumari: Police deport tourists; Anchored boat parking deposit
× RELATED கன்னியாகுமரி மாவட்டத்தில் விசைப்படகு...