ஏலகிரி மலையில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு அனுமதியின்றி ஜேசிபி இயந்திரத்தில் நிலத்தை சமன் செய்தால் நடவடிக்கை-வனத்துறை எச்சரிக்கை

ஜோலார்பேட்டை : ஏலகிரி மலையில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு எதிரொலியாக நிலத்தில் சமன் செய்ய ஜேசிபி இயந்திரம் பயன்படுத்த கூட அனுமதி சான்று பெற வேண்டும் என்று வனத்துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இங்கு சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். மேலும், ஏலகிரி மலை 14க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கி தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், இங்கு அரசு நிலங்கள் சுமார் 400 ஏக்கருக்கும் மேல் உள்ளது. இது ஒரு சுற்றுலாத் தலம் என்பதால் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களும் காலியிடங்கள் வாங்கி தங்கும் விடுதிகள், ரிசார்ட்டுகள் என கட்டிடங்களை கட்டி வருகின்றனர்.

இதனால் இங்கு ஒரு சென்ட் நிலம் லட்சக்கணக்கில் விலைக்கு போவதாக கூறப்படுகிறது.   இந்நிலையில், ஏலகிரி மலையில் உள்ள பல்வேறு இடங்களில், ஏக்கர் கணக்கில் இடங்களை வாங்கி குவித்துள்ள செல்வந்தர்கள் அவர்கள் வாங்கிய இடத்தின் அருகாமையில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான இடம், வருவாய் துறைக்கு சொந்தமான இடம், நீர் ஓடை புறம்போக்கு உள்ளிட்டவைகளில் 300 ஏக்கருக்கும் மேலாக அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

இதுகுறித்து தினகரன் நாளிதழில் கடந்த 15ம் தேதி படத்துடன், விரிவாக செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக துறை அதிகாரிகள் ஏலகிரி மலையில் பல்வேறு நபர்கள் ஆக்கிரமிப்பு செய்த இடத்தை கண்காணித்து வருகின்றனர். மேலும் வனத்துறை சார்பில் மாவட்ட வன அலுவலர் மற்றும் ரேஞ்சர் உள்ளிட்ட வனத்துறையினர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஏலகிரி மலையில் பல்வேறு பகுதிகளில் வனத்துறைக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும், சொந்த நிலமே வைத்து இருந்தாலும் கூட தனிநபர்கள் நிலத்தில் ஒரு மீட்டர் உயரத்திற்கு மேல் உள்ள எந்த இயந்திரங்களைக் கொண்டு எந்தவித பணியும் மேற்கொள்ளக் கூடாது எனவும், மேலும், நிலத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் சீரமைக்க வேண்டும் என்றால் சர்வே எண் ஆதாரத்துடன் வனத்துறை அலுவலரிடம் காண்பித்து அவரிடம் அனுமதி பெற்ற பின்னரே ஜேசிபி இயந்திரம் மூலம் சீரமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.  இதனை மீறி அனுமதியின்றி ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு நிலத்தை சமன் செய்யும் பணியில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்ககப்படும் என வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பல வருடமாக ஒரே இடத்தில் பணிபுரியும் விஏஓ

ஏலகிரி மலையில் பல வருடங்களாக பணி மாற்றம் செய்யப்படாமல் ஒரே கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக மஸ்தான் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இங்கு உள்ள அரசுக்கு சொந்தமான நிலங்கள் எங்குள்ளது. எவ்வளவு உள்ளது. எந்தந்த நிலம், என்ன என்ன நிலம் என்ற அனைத்து விவரம் அறிந்த  நபராக உள்ளார் என கூறப்படுகிறது. ஆனால் ஆக்கிரமிப்புகளை கண்டுகொள்ளாமல் இருப்பதாக புகார் உள்ளது.

கண்டுகொள்ளாத வருவாய் துறையினர்

ஏலகிரி மலையில் 400-க்கும் மேற்பட்ட ஏக்கரில் அரசு நிலம் உள்ள நிலையில் இங்குள்ள அரசியல் புள்ளிகள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினர் வாங்கிய இடங்களில் அரசு நிலம் மற்றும் வனத்துறைக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதுகுறித்து, கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்டோருக்கு தகவல் தெரிவித்தும், அவர்கள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மேலும், ஆக்கிரமிப்பு செய்யப்படும் நிலங்களுக்கு சம்பந்தப்பட்ட நபர்கள் கணிசமான ஒரு தொகையை வருவாய்த்துறையினருக்கு வழங்குவதாகவும், அதனை வாங்கிக்கொண்டு ஆக்கிரமிப்பு செய்பவர்களை கண்டும் காணாமலும் வருவாய்த்துறையினர் இருந்து வருவதாக சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஏலகிரி மலையில் பல்வேறு அரசு நிலங்கள் பல தரப்பினரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். எனவே இதுகுறித்து, கலெக்டர் நேரில் ஆய்வு மேற்கொண்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலங்கள் குறித்து விசாரணை செய்து, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அரசு நிலங்களை கண்டறிந்து மீட்டு எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>