ஆயிரம் ரூபாய்க்கு விற்ற நிலை மாறி வாழையிலை கட்டு ரூ.100க்கு விற்பனை

* வாங்க ஆளில்லாததால் வரலாறு காணாத சரிவு

* நஷ்டத்தால் வியாபாரிகள், விவசாயிகள் பரிதவிப்பு

மதுரை : ஆயிரம் ரூபாய்க்கு விற்ற வாழையிலை கட்டு, மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் இதுவரை இல்லாத வகையில், ரூ.100க்கு விற்பனையானது.

ஓட்டல்கள், சுபமுகூர்த்த நாட்கள், வீட்டு விசேஷங்களில் வாழை இலையின் பயன்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழர் பாரம்பரிய விருந்தோம்பலில், வாழை இலையின் பங்கு மிக முக்கியமானது. ஒரு அடுக்கு 5 என்பது இலைகளை கொண்டது. ஒரு கட்டில் 40 அடுக்குகள் இருக்கும். சுபமுகூர்த்த நாட்களில் கட்டு ஆயிரம் ரூபாய் தாண்டி விற்பனையாகும்.

 கடந்த மாதம் ஒரு கட்டு இலை ரூ.700 விலை வரை விற்றது. ஆனால், மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் நேற்று ஒரு கட்டு வாழை இலை விலை கடுமையாக சரிந்து ரூ.100க்கு விற்றது. விலை சரிந்தும் அவற்றை வாங்குவதற்கு ஆள் இல்லை. இதனால் 5 ஆயிரத்துக்கும் அதிகமான வாழை இலைக்கட்டுகள் விலை போகாமல் தேங்கி, பழுத்து வீணாயின. வாழை இலை விலை சரிவினால், விவசாயிகளும் இலையை கொண்டு வந்து விற்க முடியாமல் பெரும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.

வாழை இலை வியாபாரிகள் சங்க நிர்வாகி கந்தசாமி கூறும்போது, ‘‘மதுரை மாவட்டம் சோழவந்தான், மேலக்கால், கூத்தியார்குண்டு, கருவேலம்பட்டி, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டிற்கு வாழை இலைகள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. சமீப காலமாக வாழை இலை வரத்திற்கு ஏற்ப விற்பனை இல்லை. ஏற்கனவே திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் வாழை இலைகளுக்கு பதில் காகிதங்களை பயன்படுத்துகின்றனர். ஓட்டல்கள், உணவகங்களில் இலை பயன்பாடு குறைந்து விட்டது.

வாழை இலை விலை கடுமையாக சரிந்துள்ள நிலையில், தற்போது கொரோனா ஊரடங்கால் நாங்கள் மேலும் பாதிக்கப்படுவோம். தோப்புகளிலிருந்து வாழை இலைக்கட்டுகளை கொண்டு வர பெரும் செலவாகிறது. மாநகராட்சி கடைக்கு வாடகை கொடுத்து, ஊழியர்களுக்கு வேலைக்கு வைத்து வாழை இலை வியாபாரம் செய்வது முதலுக்கே மோசமாகி விடுகிறது. தேங்கி கிடக்கும் வாழை இலைகள் கழிவுகளாக மாறி விட்டன. வாழை விவசாயிகளையும், வாழை இலை வியாபாரிகளையும் அரசு காப்பாற்ற வேண்டும்’’ என்றார்.

வாழை விவசாயி கணேசன் கூறும்போது, ‘‘அறுவைக்கூலி, தூக்கு கூலி, வண்டி வாடகை எல்லாம் கொடுத்து ஒரு கட்டு இலைக்கே ரூ.200க்கு மேல் செலவாகிறது. ஆனால் செலவழித்த பணத்திற்குக் கூட விற்க முடியவில்லை. அப்படியே வெட்டாமல் மரங்களில் இலைகளை விட்டு விடுகிறோம். வாழை இலையில் உணவு பரிமாறுவதை பிரபலப்படுத்துவதுடன், பார்சலுக்கும், பரிமாறுவதற்கும் இலைக்கு மாற்றாகப் பயன்படுத்தும் காகிதங்களுக்கு தடை விதிக்க வேண்டும்’’ என்றார்.

அடியோடு சாய்ந்தது வாழை மர விற்பனை

திருமங்கலம்: மதுரை மாவட்டம் திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளான கரடிக்கல், உச்சப்பட்டி, உரப்பனூர், கருவேலம்பட்டி, சொக்கநாதன்பட்டி, எட்டுநாழி, மைக்குடி, கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். விசேஷங்களுக்கு வாழை மரங்கள் கட்டுவது வழக்கம். ஒரு மரம் ரூ.600 வரை விலை போனது. தற்போது இந்த வியாபாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

வாழை விவசாயி காளிஸ்வரி கூறும்போது, ‘‘நாங்கள் 4 ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்துள்ளோம். தற்போது ஒரு இலை கட்டு ரூ.100க்கு விலைபோகிறது. திருவிழா தடையால் வாழை மரங்கள், வாங்க ஆளின்றி வாடி வருகின்றனர். ரூ.50 ஆயிரம் செலவு செய்து வாழை நட்டோம். இந்தாண்டு பலத்த நஷ்டத்தை கொரோனா கொடுத்துள்ளது. இலை, காய், மரம் என எதுவுமே விலை போகவில்லை. அறுப்புக்கூலி கூட கிடைக்காத நிலை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே அரசு நஷ்டஈடு வழங்கவேண்டும்’’ என்றார்.

Related Stories:

>