கோவையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு-சுகாதார நிலையங்கள் மூடல்

கோவை : கோவையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பூசி மையங்கள் நேற்று மூடப்பட்டன. தடுப்பூசி எப்போது வரும்? என எங்களுக்கே தெரியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. பாதிப்பை கட்டுப்படுத்த 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, கோவை மாவட்டத்தில் சுகாதாரத்துறையின் சார்பில் 89 ஆரம்ப சுகாதார நிலையங்களின் மூலமாகவும், அரசு மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகிறது. பலர் ஆர்வத்துடன் தடுப்பூசி போட முன் வந்துள்ளனர்.

அதன்படி, தினமும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

இந்நிலையில், சென்னையில் இருந்து கோவைக்கு தேவையான அளவு தடுப்பூசி வரவில்லை. இதனால், கடும் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பெரும்பாலான ஆரம்ப சுகாதார நிலையங்களில் நேற்று தடுப்பூசி போடும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டது.

சில ஆரம்ப சுகாதாரநிலையங்களில் இரண்டாவது ேடாஸ் தடுப்பூசி மட்டும் போடப்பட்டது. மேலும், முதல் டோஸ் தடுப்பூசி போட ஆர்வத்துடன் சென்ற பொதுமக்களை மருத்துவர்கள் தடுப்பூசி இல்லை என கூறியும், இரண்டு நாட்களில் வந்து விடும் என திருப்பி அனுப்பினர்.  மேலும், சில ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொலைபேசி எண்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. தடுப்பூசி தொடர்பாக சம்மந்தப்பட்ட எண்ணில் கேட்டு தெரிந்து கொண்டு பின்னர் வர டாக்டர்கள் அறிவுறுத்தினர். அரசு மருத்துவமனையில் மட்டும் கையிருப்பில் இருந்த தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்பட்டது. தடுப்பூசி பற்றாக்குறையின் காரணமாக பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

பாதிப்பை கட்டுப்படுத்த தடுப்பூசி போட அறிவுறுத்தி வரும் அரசு அதற்கான நடவடிக்கையை முறையாக எடுக்கவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும், மிகவும் குறைந்த அளவிலான தடுப்பூசி மட்டுமே தற்போது கையிருப்பில் இருப்பதால் அதனை இரண்டாவது டோஸ் போடும் நபர்களுக்கு அளிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதனால், இன்று முதல் முதல் டோஸ் தடுப்பூசி போடும் பணிகள் முற்றிலும் பாதிக்கப்படும்.  

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், “கோவையில் தினமும் 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்தது. தற்போது, கையிருப்பில் மிக குறைந்த அளவில்தான் தடுப்பூசி இருக்கிறது. இதனை ஒரு மையத்திற்கு 200 வீதம் பிரித்து கொடுக்க முடிவு செய்துள்ளோம்.

சென்னையில் ஒரு லட்சம் தடுப்பூசி கேட்கப்பட்டது. அவர்கள் அளித்தது 5 ஆயிரம்தான். அதுவும் முடிந்துவிட்டது. கூடுதல் தடுப்பூசி கேட்டு உள்ளோம். அது எப்போது வரும்? என எங்களுக்கே தெரியவில்லை” என்றனர்.

Related Stories:

>