அரசு விதிகளை பின்பற்றாவிட்டால் மார்க்கெட் கடைகளுக்கு சீல் வைக்கப்படும்-ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் அரசு விதிகளை பின்பற்றி பணியாற்ற விட்டால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என நகராட்சி ஆணையாளர் தேவிகா எச்சரித்துள்ளார்.ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட்டில் சமூகஇடைவெளி இல்லாமலும், மாஸ்க் அணியாமலும் ஒரே இடத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியாபாரிகள், தொழிலாளர்கள் கூடியிருந்து வேலை செய்து வந்தனர். இதனால் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டது.

இதுகுறித்து தினகரன் நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நகராட்சி ஆணையாளர் தேவிகா நேற்று ஒட்டன்சத்திரம் மார்க்கெட் பகுதிகளை ஆய்வு செய்து, சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் ஆணையாளர் கூறுகையில், ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் பணியாளர்கள் அதிகளவு கூடுவதால் வேலை நாட்களை இரண்டாக பிரித்து சிப்ட் முறையில் தொழிலாளர்களை வேலை செய்ய அனுமதிக்க வேண்டும். வாகனங்கள் அதிகளவில் வருவதால், மார்க்கெட்டிற்கு வரும் மலை காய்கறிகளை திண்டுக்கல் சாலையில் உள்ள அபி மஹால் எதிரே உள்ள மார்க்கெட்டில் இறக்க வேண்டும். மற்ற காய்கறிகளை வழக்கம்போல் காந்தி மார்க்கெட்டில் இறக்க வேண்டும்.

மார்க்கெட்டில் பணிபுரியும் அனைவரும் தடுப்பூசி போட்டு கொண்டு, முகக்கவசம், சமூக இடைவேளியுடன் பணியாற்ற வேண்டும். மார்க்கெட் செல்லும் வழிகளை ஒருவழி பாதையாக மாற்ற வேண்டும். அரசு அனுமதித்த நேரத்திற்குள் காய்கறிகளை ஏற்றுமதி செய்ய வேண்டும். ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு சமயத்தில் கடைகள் அனைத்தையும் அடைத்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அரசு விதிகளை மீறினால் கடைகள் சீல் வைக்கப்பட்டு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

இதில் டிஎஸ்பி அசோகன், மண்டல துணை வட்டாட்சியர் விஜயகுமார், வருவாய் ஆய்வாளர் பத்மாவதி, வட்டார மருத்துவ அலுவலர் காசிமுருகபிரபு, சுகாதார ஆய்வாளர் வீரபாகு மற்றும் அலுவலர்கள், மார்க்கெட் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>