×

ஆக்சிஜன் பற்றாக்குறையால் 7 பேர் உயிரிழந்ததாக எழுந்துள்ள புகார் குறித்து வேலூர் அரசு மருத்துவமனை அறிக்கை அளிக்க உத்தரவு

வேலூர்: ஆக்சிஜன் பற்றாக்குறையால் 7 பேர் உயிரிழந்ததாக எழுந்துள்ள புகார் குறித்து வேலூர் அரசு மருத்துவமனை அறிக்கை அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 2வது அலை வேகமாக பரவி வருகிறது. தினந்தோறும் 150க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் அரசு, தனியார் மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது. போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் டாக்டர்கள் திணறி வருகின்றனர். வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 250க்கும்  மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பாதிப்பு அதிகமாக உள்ளவர்களை சிறப்பு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் கொரோனா தீவிர சிகிச்சை பிரிவு நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செல்லும் பைப் லைனில் திடீரென உடைப்பு ஏற்பட்டு ஆக்சிஜன் தடைபட்டது. இதனால் நோயாளிகள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். இதில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி செல்வராஜ்(66), ராஜேஸ்வரி (68), பிரேம்(38) ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் 2வது மாடியில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். அதேபோல் வேறு நோய்களுக்காக மற்றொரு வார்டில் பலர் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை சேர்ந்த ராஜேந்திரன்(52) என்பவர் மூச்சுத்திணறலுக்கு சிகிச்சை பெற்று வந்தார்.

திடீரென ஆக்சிஜன் தடைபட்டதால் இந்த வார்டில் ராஜேந்திரன், மதன், லீலாவதி (70), கபாலி (37) ஆகிய 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் மற்ற நோயாளிகளிடம் பெரும் பீதியை ஏற்படுத்தியது. சில நோயாளிகள் கதறி அழுதனர். நோயாளிகளின் உறவினர்களும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் தான் இறந்துவிட்டதாக குற்றம்சாட்டினர். பின்னர் மாலை 4 மணியளவில் மீண்டும் ஆக்சிஜன் செயல்பாட்டுக்கு வந்தது. இதையடுத்து மற்ற நோயாளிகள் நிம்மதி அடைந்தனர். இருப்பினும் இந்த சம்பவம் கொரோனா நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் இடையே கடும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 7 பேர் இறந்ததாக புகார் எழுந்த நிலையில் மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு ஆய்வு செய்தார்.

ஆய்வுக்கு பின் 7 பேர் உயிரிழப்புக்கான காரணம், நோயாளிகளின் விவரம் உள்ளிட்டவை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இதனிடையே இது குறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம்; 7 பேர் உயிரிழப்புக்கு ஆக்சிஜன் பெற்றாக்குறை காரணமல்ல என விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Vellore Government Hospital , Order to report to Vellore Government Hospital on the complaint that 7 persons died due to lack of oxygen
× RELATED வேலூர் அரசு மருத்துவமனையில் தாய்க்கு...