×

நம்முடைய இயலாமையை உணர்தல்

லெந்து காலம் கிறிஸ்தவர்களுக்கு ஒரு வரமாக அமைந்துள்ள காலம் எனலாம். கிறிஸ்தவர்களின் பண்டிகைகளான கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் ஈஸ்டர் பண்டிகைகள் குழுக்களாக இயங்குவதும் கொண்டாடி மகிழ்வதுமாக உள்ளன. ஆனால் லெந்து காலத்தில் ஒருவர் தனிமையை உணர்வதும், அமைதியை நாடுவதும், படிப்பதில், மன்றாட்டுகளில் கவனம் செலுத்துதல் மற்றும் தியானத்தில் ஈடுபடுதல் முதலிய தனிநபர் ஆன்மிக வளர்ச்சிக்கு உதவும் செயல்களில் ஈடுபடுவதற்கு வாய்ப்பைத் தருகிறது. தனிநபர் ஆன்மிக வளர்ச்சி மற்றும் ஆளுமை மேம்பாட்டிற்கு உதவும் செயல்களில் ஒன்றுதான் ஒருவர் தம்முடைய இயலாமை எது அல்லது ஆற்றலின் வரையறை எது என உணர்தல் ஆகும்.

வேறுவகையில் கூற வேண்டும் என்றால், ‘‘உன்னையே நீ அறிதல்” ஆகும். இதை ஒருவர் அடைவதற்கு தம்மைப்பற்றிப் பிறர் முன் வைக்கும் மதிப்பீடு, விமர்சனங்களில் அடங்கி யிருக்கும் உண்மைகளை ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் தம்மையே சுய விமர்சனம் செய்து கொள்வதின் வழி அடையமுடியும். இவ்விரண்டு முயற்சி அல்லது பயிற்சியில் ஈடுபடாதவரின் ஆளுமை மேம்பட வாய்ப்பு இல்லை என்பதோடு அவர் பிறருக்கும் தமக்கும் பயனற்றவராகவே இருப்பார்.

தூய பவுல் அடிகள் இயேசு கிறிஸ்துவின் சிலுவையினால் ஈர்க்கப்பட்டு அவரது தொண்டரானார். நிச்சயமாக அக்காலத்தில் அவர் இயேசுவின் சீடர்களைக் காட்டிலும் மெத்தப் படித்தவராக இருந்தார். குறிப்பாக யூதசமயச் சட்டங்களை அறிந்ததோடு சிறந்து வாதிடும் ஆற்றல் படைத்தவராகவும் இருந்தார். அவர் பல தகுதிகளுடனும் யூதர் எனும் வலுவான அடையாளத்துடனும் இருந்து ரோம நாட்டு குடி உரிமை பெற்றவராகவும் இருந்தார். ஆனால் அவர் தம்மைப் பற்றிக் கூறும்போது ‘‘ஆனால் எனக்கு ஆதாயமான இவை அனைத்தும் கிறிஸ்துவின் பொருட்டு இழப்பு எனக் கருதினேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்துவிட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன். (பிலிப்பியர் 3:7-8). அந்த அளவுக்கு கிறிஸ்துவை நேசித்து அவரிடம் தம் வாழ்கையை முழுவதுமாக ஒப்படைத்து வாழ்ந்தார்.

இயேசு கிறிஸ்துவின் நேரடி சீடராக இல்லாதிருந்தும் ‘‘இயேசு கிறிஸ்துவே மீட்பர்’’ என்கிற நற்செய்தியை உலகின் பல மூலைகளில் பரப்பி திருச்சபைகள் உருவாகக் காரணமாகவும் இருந்தார். இன்று திருமறையில் புதிய ஏற்பாட்டில் அவருடைய கடிதங்களே அதிகம் இடம்பெற்றுள்ளது, நம்மை வியப்படையச்செய்து நமக்குப் பயன் விளைவிக்கிறது. இவ்வளவு ஆளுமையுடைய பவுல் அடிகள் தமது இயலாமையை உணர்ந்ததுடன் அதில் அவரது தவிப்பையும் உளப்பேராட்டத்தையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். இங்குதான் பவுல் அடிகள் நம் முன் உயர்ந்து நிற்கிறார்.

அவர் கூறுகையில் ‘‘ஏனெனில், நான் செய்வது என்னவென்று எனக்கே தெரிவதில்லை; எதைச் செய்ய விரும்புகிறேனோ அதை நான் செய்வதில்லை;எதை வெறுக்கிறேனோ அதையே செய்கிறேன்… நன்மை செய்யும் விருப்பம் என்னிடம் இல்லாமல் இல்லை; அதைச் செய்யத்தான் முடியவில்லை…நான் விரும்பாததைச் செய்கிறேன் என்றால், அதை நானாகச் செய்யவில்லை; என்னில் குடிகொண்டிருக்கும் பாவமே செய்கிறது’’ (ரோமர் 7:14-19).

பவுல் அடிகள் பெரும் பாவச்செயல்கள் எதிலும் அவர் ஈடுபட்டதில்லை. ஒருபக்கம் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவர் பாதையில் நடந்தாலும் அவர் பல ஆண்டுகள் பழகி வந்த யூதகலாச்சாரம் மற்றும் அதன் சட்டங்கள் அவரை தன் பக்கம் இழுத்து அதில் நிலைகொண்டிருக்க அவரை வற்புறுத்துகிறது. பவுல் இது தவறு என்று உணர்வதுடன், அதிலிருந்து முற்றிலும் விடுபட முடியாது இருக்கும் தன் அவ நிலையை உணருகின்றார். இதுதான் ‘‘உன்னையே நீ அறிதல்’’ என்பதின் ஒரு நிலை. காலப் போக்கில் அவர் இதிலிருந்து படிப்படியாக விடுபட்டார். இருப்பினும் அவர் தமக்குள் இருந்த கடவுளின் ஆவியைக்கொண்டு தனது ஊனியல்புக்கு எதிரானப் போராட்டத்தை வாழ்நாள் முழுவதும் நடத்திவந்தார்.

லெந்து காலம் சுயபரிசோதனை செய்யும் காலம். நம்முடைய இயலாமை எது? நம்மில் குடிகொண்டிருக்கும் இரு எதிர்நிலை, நம்பிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் எவை? கிறிஸ்தவ வாழ்வு மற்றும் கிறிஸ்துவுக்கு எதிரான வாழ்வு இரண்டும் நம்மில், நமது குடும்பத்தில், நமது பணிகளில், நமது திருச்சபையில் எத்தகைய முரண்பாடு இன்றி வெளிப்படுவதை நம்மால் உணரமுடிகிறதா? இதை உணரும் நேர்மை,’ பக்குவம் நமக்கு உள்ளதா? நம்மில் இருக்கும் எதிரெதிர் நிலைகளை அகற்ற நாம் கடவுளின் துணையைத் தேடியதுண்டா? அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதுண்டா?

பேராயர் J. ஜார்ஜ் ஸ்டீபன். (Bishop, Madras).

The post நம்முடைய இயலாமையை உணர்தல் appeared first on Dinakaran.

Tags : Christians ,Christmas ,New Year ,Easter… ,
× RELATED மயிலாடுதுறையில் குருத்தோலை ஞாயிறு பவனி