×

நிறுவனங்கள், கடைகள், உணவகங்களில் மாஸ்க் அணியாதவர்களுக்கு 3.90 கோடி அபராதம்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொது இடங்களில் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளான முகக்கவசம் அணிதல், இரண்டு மீட்டர்  இடைவெளியுடன் சமூக இடைவெளியை கடைபிடித்தல், அவ்வப்பொழுது கைகளை சோப்பு கரைசல் மற்றும் சானிடைசர் கொண்டு சுத்தப்படுத்திக்  கொள்ளுதல், கடைகள் மற்றும் வணிக வளாகங்களின் வாயிலில் கிருமி நாசினி திரவங்கள் வைத்தல் போன்ற வழிமுறைகளை  கட்டாயம் பின்பற்ற  மாநகராட்சியின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
     
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், உணவகங்கள், அங்காடிகள் போன்றவற்றில் அரசின் பாதுகாப்பு  வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என மாநகராட்சி அலுவலர்களால் தொடர்ந்து கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, பாதுகாப்பு வழிமுறைகளை  பின்பற்றாத நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் மற்றும் முகக்கவசம் அணியாத தனிநபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. சென்னை  மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்று சென்ட்ரல் ரயில் நிலைய  வளாகத்தில் முகக்கவசம் அணியாத நபர்களிடமிருந்து 56,000 மாநகராட்சி அலுவலர்களால் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும் தெற்கு ரயில்வே வர்த்தக மேலாளர் முருகன் சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டல அலுவலர் (பொ) தமிழ்செல்வன் நேரில் சந்தித்து ரயில்  நிலையங்களில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.  தொடர்ந்து அனைத்து ரயில் நிலையங்களிலும் தனிமனித இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள்  பின்பற்றப்படுகின்றனவா என்பதை ரயில்வே நிர்வாகம் உறுதிசெய்ய வேண்டும் என சென்னை மாநகராட்சியால் கேட்டுக்கொள்ளப்பட்டது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் மற்றும் முகக்கவசம் அணியாத தனிநபர்களிடமிருந்து 18ம்  தேதியன்று மொத்தம் 3.90 கோடி அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. அபராத தொகை வசூலிப்பது என்பது அரசின் நோக்கமல்ல. பொதுமக்கள்  தங்களின் தவறை உணர்ந்து பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றவே இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

290 பயணிகளுக்கு 1.45 லட்சம் அபராதம்
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் முகக்கவசம் அணியாத ரயில் பயணிகளிடம் 500  வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. கடந்த 2 நாட்களில் ரயில் நிலைய வளாகத்தில் மற்றும்  ரயில்களில் முகக்கவசம் அணியாத  290 ரயில் பயணிகளிடமிருந்து சுமார் 1,45,000 அபராதமாக வசூலித்துள்ளது. இந்த நடைமுறை  அடுத்த 6 மாத காலத்திற்கு மறுஉத்தரவு வரும் வரை  அமலில் இருக்கும். மேலும் நேற்று சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் இணைந்து  முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, சானிடைசர் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags : Chennai Corporation , Corona, Chennai Corporation, Notice
× RELATED திருவான்மியூர் கடற்கரையில் வானில்...