ரூ.300 டிக்கெட்டில் 90 நாட்களுக்குள் ஏழுமலையானை தரிசிக்கலாம்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 30ம் தேதி வரை சுவாமி தரிசனம் செய்வதற்காக ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டுகளை பெற்ற பக்தர்கள் மட்டும் தற்போது தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக பல்வேறு மாநிலங்களில் கட்டுபாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆன்லைனில் ஏப்ரல் 21 முதல் 30ம் தேதி வரை ரூ.300 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்த பக்தர்கள் கொரோனா கட்டுபாடுகள் மற்றும் பரவல் காரணமாக வர முடியாவிட்டால், அதே டிக்கெட்டுகளை வைத்து அடுத்த 90 நாட்களுக்குள் தரிசனம் செய்து கொள்ளலாம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், ஏற்கனவே இலவச தரிசன டிக்கெட்டுகள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்களில் இருமல், சளி போன்ற உடல்நலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட பக்தர்கள் திருமலை யாத்திரை வருவதை ஒத்திவைக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் கொரோனா விதிகளை பின்பற்றி தரிசனம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related Stories:

>