உரம் விலையை குறைக்க கோரி போராட்ட அறிவிப்பு வெளியிட்ட அய்யாக்கண்ணுக்கு வீட்டு சிறை: அரை நிர்வாணத்தில் விவசாயிகள் மறியல்

திருச்சி: உரம் விலையை குறைக்க கோரி போராட்டம் அறிவிப்பு வெளியிட்ட அய்யாக்கண்ணு வீட்டு சிறை வைக்கப்பட்டதை தொடர்ந்து அரை நிர்வாணத்தில் விவசாயிகள் மறியல் போராட்டம் நடத்தினர். உரம் விலையை உற்பத்தி நிறுவனங்களே எவ்வித கட்டுப்பாடுமின்றி நிர்ணயித்து கொள்ளலாம் என்ற முடிவின் தொடர்ச்சியாக, தற்போது 60 சதவீதம் உரங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதை கண்டித்து கடந்த 12ம் தேதி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உரம் விலையை குறைக்கும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்றும், போராட்டத்துக்கு அனுமதி மறுத்த காவல்துறையை கண்டித்தும், உரவிலையை குறைக்க கோரியும், விவசாயிகளின் விளை பொருட்களுக்கு இரண்டு மடங்கு விலை கொடுக்க கோரியும் திருச்சி ரயில் நிலையத்தில் 19ம் தேதி (நேற்று) விவசாயிகள் கழுத்தை அறுத்து போராட்டம் நடத்த உள்ளதாக சங்கத்தின் மாநிலத்தலைவர் அய்யாக்கண்ணு 18ம் தேதி அறிவித்தார். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முன்தினம் இரவே கரூர் பைபாஸ் சாலையில் மலர் நகரில் உள்ள வீட்டு வாசலில் போலீசார் நிறுத்தப்பட்டு சிறை வைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று போலீசாரை மீறி வெளியே வந்து கரூர் பைபாஸ் சாலையில் அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் ஏர்கலப்பைகளுடனும், இலைகளை உடலில் கட்டிக்கொண்டும் அரை நிர்வாணத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டதாக அய்யாக்கண்ணு உள்பட 50 பேரை கைது செய்தனர்.

Related Stories: