மும்பை இந்தியன்சுடன் டெல்லி இன்று மோதல்: சென்னையில் பலப்பரீட்சை

சென்னை: ஐபிஎல் தொடரின் 13வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் சென்னையில் இன்று மோதுகின்றன. ஐபிஎல் தொடரின் தொடக்க கட்ட லீக் ஆட்டங்கள் சென்னை, மும்பை நகரங்களில் நடைபெற்று வருகின்றன. மும்பையில் முதல் 3 ஆட்டங்களில் விளையாடிய  டெல்லி கேப்பிடஸ் அணி தற்போது சென்னை வந்துள்ளது. இங்கு தனது முதல் ஆட்டத்தில் இன்று மும்பையை எதிர்கொள்கிறது. தனது முதல் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற டெல்லி, அடுத்து ராஜஸ்தானிடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் போராடி தோற்றது. தொடர்ந்து நேற்று முன்தினம் நடந்த போட்டியில் பஞ்சாப்பை 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. பிரித்வி, தவான், ரிஷப், ஸ்டாய்னிஸ், வோக்ஸ், ஆர்.அஷ்வின், ரபாடா, ஆவேஷ் கான் ஆகியோருடன் புதுவரவான ஸ்மித், லலித் யாதவ் நம்பிக்கை அளிக்கின்றனர்.

அந்த நம்பிக்கை மும்பைக்கு சவாலாக இருக்கும். பெங்ளூருக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்த மும்பை, அடுத்த 2 ஆட்டங்களில் கொல்கத்தாவுக்கு எதிராக 10 ரன் மற்றும் ஐதராபாத்துக்கு எதிராக 13 ரன் வித்தியாசத்தில் வென்றது. சொற்ப ரன் வித்தியாசத்தில் வென்றாலும், மும்பை அணி கடைசி வரை தன்னம்பிக்கையுடன் விளையாடுவதே அந்த அணியின் வெற்றி ரகசியமாக உள்ளது. இந்த உத்வேகம் டெல்லிக்கு பெரும் சவாலாக இருக்கும். ராகுல் சாஹர், போல்ட், பும்ரா ஆகியோரின் பந்துவீச்சுடன், ஹர்திக் பாண்டியாவின் துடிப்பான பீல்டிங்கும் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கும். சம பலம் வாய்ந்த அணிகள் மோதும் இப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

Related Stories:

>