கொரோனா இரண்டாம் அலை பரவுவதால் கள்ளழகர் வைகையில் இறங்க அனுமதி கிடையாது: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: கொரோனா இரண்டாம் அலை பரவி வரும் நிலையில் வைகையாற்றில் அழகர் எழுந்தருளும் நிகழ்ச்சியை நடத்த உத்தரவிட முடியாது என ஐகோர்ட் கிளை அதிரடியாக கூறியுள்ளது. மதுரை, தல்லாகுளத்தைச் சேர்ந்த அருண் போத்திராஜா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரையில் ஆண்டுதோறும் 15 நாட்கள் நடக்கும் சித்திரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. கொரோனா வைரஸ் 2ம் அலை காரணமாக சுகாதாரத்துறை தரப்பில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதனால், பக்தர்கள் பங்கேற்பின்றி நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

அழகர்கோயிலில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கள்ளழகராக மதுரை வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு, கோயில் வளாகத்திலேயே நிகழ்ச்சி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பழமையான நடைமுறை பாதிக்கும். எனவே, கோயில் விழாக்களுக்கு தடை விதிக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி குறைந்த அளவிலான பக்தர்களுடனோ, பக்தர்கள் பங்கேற்பின்றியோ வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சியை நடத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர், ‘‘கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் ஒரு முன்னோட்டம் தான். இன்னும் பெரிய அளவில் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு உள்ளது. கொரோனா பரவல் தீவிரத்தை கருத்தில் கொண்டே திருவிழாக்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்கு எப்படி அனுமதிக்க முடியும்? வைகை ஆற்றில் தண்ணீர் இல்லை. குப்பைகள் தான் தேங்கி கிடக்கின்றன. இதில் எப்படி நிகழ்ச்சி நடத்த முடியும்?’’ என கேள்வி எழுப்பினர். பின்னர், வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க முடியாது என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்தனர்.

Related Stories:

>