கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளியுங்கள் : தமிழக அரசுக்கு உத்தரவு!!

சென்னை :கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பு விதிகளில் சவால்களை எதிர்கொள்ளும் மாற்றுத் திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்க உத்தரவிடக் கோரி மீனாட்சி பால சுப்பிரமணியம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பேனர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வு மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்கள் அமைப்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மாற்றுத் திறனாளிகளை முன்னுரிமை பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்திற்கு இதுவரை பதில் வரவில்லை என்று தமிழக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும் தடுப்பூசி வழங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு கவுண்டர்கள் அமைக்க அரசு தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்திவதில் முன்னுரிமை அளிக்கப்படுவதால் மாற்றுத் திறனாளிகளுக்கும் வயது வரம்பில் சலுகை அளிக்குமாறு மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அனைத்து தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு கவுண்டர்கள் அமைக்க வேண்டும், மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் சாய்தள பாதையை அமைக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். அதே போல் மாற்று திறனாளிகளுக்கு வயது வரம்பில் சலுகை அளிப்பதால் பக்கவிளைவுகள் ஏற்படுமா என்பதை மருந்து நிறுவனங்களுடன் கலந்து பேசி 3 நாட்களில் முடிவெடுக்கவும் உத்தரவிட்டு பொதுநல வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

Related Stories:

>