×

பலூன்களால் அலங்கரித்தல்... சாதனைகளை விளக்கும் உரை...புகைப்படம் எடுத்தல் :ஆக்சிஜன் லாரியை வைத்து அற்ப விளம்பரம் செய்த பாஜக!!

போபால் : மத்தியப் பிரதேச மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வரும் நிலையில், இந்தூருக்கு வந்த ஆக்சிஜன் டேங்கர் லாரியை நிறுத்தி பாஜகவினர் விழா நடத்தியது கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. மத்திய பிரதேசம் மாநிலம் ஸஹோல் என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில் ஓரிரு நாட்களுக்கு முன்பு ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாலிடிகள் 10 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து குஜராத்தில் இருந்து மத்திய பிரதேச மாநிலம் இந்தூருக்கு 30 டன் ஆக்சிஜனை ஏற்றுக் கொண்டு டேங்கர் லாரி ஒன்று சென்றது.

ஆனால் அதை 2க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜகவின் உள்ளூர் தலைவர்கள் தடுத்து நிறுத்தினர். கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் தங்களது கடைசி மூச்சை சுவாசித்து கொண்டு இருக்கும் நேரத்தில் அமைச்சர் ஒருவரும் எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்களும் லாரியை பலூன்களால் அலங்கரித்தனர். அதைத் தொடர்ந்து லாரிக்கு பூஜையும் செய்யப்பட்டது. பின்னர் சாந்தன் நகர் சதுக்கத்தில் அமைச்சர் ஒருவர் மாநில அரசின் சாதனைகளை கூறி சிறிது நேரம் உரை நிகழ்த்தினார். பின்னர் அவர்கள் அனைவரும் லாரியின் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த செயல் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. இது வெட்கக்கேட்டின் உச்சம் என்று காங்கிரஸ் கட்சி சாடியுள்ளது.ஆனால் இதனை மறுத்துள்ள பாஜகவினர், ஆக்சிஜன் நிரப்பப்பட்ட லாரி உரிய நேரத்தில் சென்று சேர்ந்ததாக விளக்கம் அளித்துள்ளனர்.


Tags : BJP , ஆக்சிஜன் பற்றாக்குறை
× RELATED பாஜக அரசின் கையாலாகாத தன்மை : ப.சிதம்பரம் தாக்கு