×

கண்ணமங்கலம் அடுத்த புதுப்பாளையம் நாகநதியில் இரவு, பகலாக மணல் கொள்ளை-மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

கண்ணமங்கலம்:  வேலூர் மாவட்டம், அமிர்தி அருகே ஜவ்வாது மலைத்தொடரில் நாகநதி உருவாகி  சிங்கிரி கோயில் தடுப்பணை வழியாக கண்ணமங்கலம், அம்மாபாளையம், அத்திமலைப்பட்டு, புதுப்பாளையம், மேல் நகர், கீழ் நகர், ஆரணி வரை சுமார் 30 கி.மீ. தூரமும், தொடர்ந்து செய்யாறு வழியாக சென்று கடலில் கலக்கிறது. இந்நிலையில், இந்த ஆற்றில் மணல் கடத்தல் அதிகளவில் நடைபெறுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகினறனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: பல ஆண்டுகளுக்கு முன்பு நாகநதியில்   தண்ணீர் வந்தால் கரையையொட்டி உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் 10 அடி ஆழத்தில் இருக்கும். இதனால் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தேவையான நீர் கிடைக்கப்பெற்று வந்தது. ஆனால், தற்போது மாதம் முழுவதும் ஆற்றில் தண்ணீர் வந்தாலும் கிணறுகள் நிரம்பாமல் வறண்டு கிடக்கிறது. இதற்கு காரணம் ஆற்றில் நடைபெறும் மணல் கொள்ளைதான்.

கடந்த சில ஆண்டுகளாக இரவு நேரத்தில் ஆற்றிலிருந்து சமூக விரோதிகள் மணலை திருட ஆரம்பித்தனர்.  கடந்த உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு எந்தவித தயக்கமும் இன்றி 24 மணி நேரமும் இரவு பகலாக மணல் கொள்ளை நடக்கிறது. நள்ளிரவில் மணலை ஏற்றிக்கொண்டு வாகனங்கள் கிராமங்களின் நடுவே செல்வதால் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் கிராம மக்கள் தூங்க முடியாமல் கடும்  அவதிக்குள்ளாகின்றனர். விவசாயிகளோ அல்லது அதிகாரிகளோ இவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

இதில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலானோர் மக்கள் பிரதிநிதிகள் அல்லது அவர்களின் பினாமிகள்.  தகவலறிந்து வருவாய் மற்றும் காவல்துறையினர் சென்று அவர்களை பிடித்தால், அதிகாரிகளுக்கு மணல் கடத்தல் ஆசாமிகள் கொலை மிரட்டல் விடுவது, இடமாற்றம் செய்வதாக மிரட்டும் நிலை உள்ளது. இதனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர்.

பகலில் மணலை சலித்து வைத்து கொண்டு, இரவில் டிராக்டர்களில் மணலை கடத்திச் செல்கின்றனர். புதுப்பாளையம் அருகே நாகநதியில் குறைந்தபட்சம் 100 டிராக்டர்களில் மணல் கடத்துவதற்காக தயாராக குவித்து வைத்துள்ளனர். நாளிதழ்களில் செய்தி வரும்போது பெயரளவில் ஒரு சில மாட்டு வண்டிகளை பிடிக்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து மணல் கொள்ளையை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Naganayam ,district administration , Kannamangalam: The river Naganathi originates in the Javadu hills near Amirthi, Vellore district and passes through the Singiri temple dam.
× RELATED காலை 11 முதல் மாலை 3.30 மணி வரை தேவையின்றி...