அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் துர்நாற்றம் வீசுகிறது

உடுமலை :  அமராவதி அணையில் இருந்து கல்லாபுரம், ராமகுளம் பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் துர்நாற்றம் வீசுகிறது.

உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து கல்லாபுரம், ராமகுளம் பாசனத்திற்கு வாய்க்கால் வழியாக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சுமார் 2850 ஏக்கர் விளைநிலம் இதனால் பயன் அடைகிறது.

சமீபத்தில் பாசன பரப்பில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் அறுவடை செய்துள்ள நிலையில், அமராவதி அணையிலிருந்து கால்வாய்க்கு சிறிதளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 3 மாதத்திற்கு மேலாக அமராவதி அணையின் நீர்மட்டம் 85 அடியாக நீடித்து வருகிறது. இதனால் அணையின் கீழ் புறத்திலிருந்து வெளியேறும் தண்ணீர் மிகுந்த துர்நாற்றம் வீசுவதாக கால்வாயின் கரையோரம் வசிக்கும் விவசாயிகள் தெரிவித்தனர்.

பாசனம் இல்லாத நிலையில் திறந்துவிடப்படும் தண்ணீரை பொதுமக்கள் துவைக்கவோ, குளிக்கவோ பயன்படுத்துவதற்கு அச்சமடைந்துள்ளனர். மேலும் துர்நாற்றம் வீசும் தண்ணீரால் தொற்றுநோய் பரவும் என பீதி கொள்கின்றனர். விவசாயிகள் கூறுகையில், அணைக்கட்டில் நீண்ட நாட்களாக அடிப்பகுதியில் தண்ணீர் தேங்கி இருந்ததால் கிணற்று நீரைப் போல துர்நாற்றம் வீசுகின்றது. இதனால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாது, என்றனர்.

Related Stories:

>