திசையன்விளை : திசையன்விளை அருகே உவரியில் நான்கு சந்திப்பில் இருந்து ஊருக்குள் செல்லும் சாலையின் உள்ள மின்கம்பங்கள் சிமென்ட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரியும்படி ஆபத்தான நிலையில் இருந்தது. பலத்த காற்று வீசினால் சாய்ந்து ஆடியது.
இந்நிலையில் நேற்று மாலை உவரியில் இருந்து திசையன்விளை வழியாக நெல்லை செல்லும் அரசு பஸ் பயணிகளை ஏற்றுவதற்காக உவரி பஸ் நிலையத்திற்கு வந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக சாலையோரம் பழுதடைந்த நிலையில் இருந்த மின்கம்பம் சரிந்து பேரூந்தின் மீது விழுந்தது. தொடர்ந்து பஸ் சென்றதால் மேல் பகுதியில் மின்கம்பி மாட்டிக்கொண்டது. இதனால் சாலையோரம் பழுதடைந்து இருந்த நான்கு மின்கம்பங்களும் அடுத்தடுத்து சரிந்து விழுந்தது. இதனால் சார்ட் சர்க்யூட் ஏற்பட்டு மின்தடையானது. இதனால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
சம்பவத்தின் போது பஸ் நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த பயணிகள் அலறி அடித்துகொண்டு ஓடினர். தகவலறிந்த மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மின்சப்ளையை நிறுத்தியதுடன். புதிய மின்கம்பங்களை அமைத்து மின்சார விநியோகம் கொடுக்க ஏற்பாடு செய்தனர்.
