கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனது சகோதரருக்கு உ.பி. மருத்துவமனையில் படுக்கை கிடைக்கவில்லை!: மத்திய அமைச்சர் வி.கே.சிங்கின் ட்வீட்டால் சர்ச்சை..!!

லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தனது சகோதரருக்கு மருத்துவமனையில் படுக்கை கிடைக்கவில்லை என மத்திய அமைச்சர் வி.கே.சிங் ட்விட்டரில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளிலேயே இந்தியாவில்தான் கொரோனா அதிவேகமாக பரவுகிறது. கொரோனா பரவலின் இந்த 2-ம் அலையை எதிர்கொள்ளவேண்டிய நெருக்கடியில் மத்திய, மாநில அரசுகள் உள்ளன. இந்தியாவில் மராட்டியம், மத்திய பிரதேசம், குஜராத், டெல்லி, உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். தொடர்ந்து, உத்திரப்பிரதேச மாநிலத்தில் கொரோனாவின் தாக்கத்தால் அரசு மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பி வழிந்துகொண்டிருக்கின்றன.

பலர் மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் அலைந்து வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அமைச்சர் வி.கே.சிங், தனது சகோதரருக்கு மருத்துவமனையில் படுக்கை கிடைக்கவில்லை என ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். காசியபாத்தில் கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் ஏற்பாடு செய்யப்படவில்லை என்றும் தனது சகோதரர் ஒருவருக்கு சிகிச்சைக்காக ஒரே ஒரு படுக்கை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் பாஜக தலைவர்கள் சிலரை டாக் ( tag ) செய்து அவர் ட்விட்டரில் பதிவிட்டார்.

மத்திய அமைச்சராக இருப்பவர் அதுவும் இந்த நாட்டின் முன்னாள் ராணுவ தளபதியாக பதவி வகித்தவர், தமது சகோதரருக்கு கொரோனா சிகிச்சைக்கு படுக்கை கிடைக்கவில்லை என பொதுவெளியில் பகிரங்கமாக பதிவிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக ஆளும் உத்திரபிரதேச மாநிலத்தில் மத்திய அமைச்சரின் சகோதரருக்கு படுக்கை கிடைக்கவில்லை என்ற செய்தி வேகமாக பரவியதை அடுத்து அவர் தனது ட்வீட்டை நீட்டியுள்ளார்.

Related Stories:

>