×

கொரோனா தடுப்பு பணியில் உயிரிழக்கும் மருத்துவ பணியாளர்களுக்கான ரூ.50 லட்சம் காப்பீட்டு திட்டத்தை சத்தமின்றி ரத்து செய்தது மத்திய அரசு..!!

டெல்லி: கொரோனா தடுப்பு பணியின் போது உயிரிழக்கும் மருத்துவ பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த 50 லட்சம் ரூபாய் காப்பீட்டு திட்டம் திரும்ப பெறப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை உக்கிரமாக பரவி வரும் நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு மருத்துவ பணியாளர்களை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைளில் பெரும் பங்கு வகிப்பது மருத்துவ பணியாளர்களே. கொரோனா தொற்றால் மருத்துவ பணியாளர்கள் பலர் உயிரிழந்ததை தொடர்ந்து அவர்களுக்கு கடந்த ஆண்டு மார்ச் 26ம் தேதி 50 லட்சம் ரூபாய் காப்பீட்டு தொகை வழங்கும் திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். 22 லட்சம் சுகாதார பணியாளர்களுக்கான 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணம் வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த காப்பீட்டு திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை சார்பில், அனைத்து மாநிலங்களுக்கும் கடந்த மாதம் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது. அதில், கொரோனா தடுப்பு பணியின் போது உயிரிழக்கும் மருத்துவ பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த 50 லட்சம் ரூபாய் காப்பீட்டு வழங்கும் திட்டம் திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 287 பேருக்கு மட்டுமே இந்த காப்பீடு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை மிக மோசமாக பரவி வரும் இந்த நிலையில், சத்தமே இல்லாமல் 50 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Corona prevention work, medical staff, insurance plan, federal government
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...