புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதுங்க..!! மே மாதம் ஆன்லைனில் நடைபெறும் செமஸ்டர் தேர்வில் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி

சென்னை: ஆன்லைன் செமஸ்டர் தேர்வை புத்தகம் பார்த்து எழுத மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி என தகவல் தெரிய வந்துள்ளது. மே மாதம் நடைபெறும் செமஸ்டர் தேர்வை புதிய முறையில் நடத்தவும் அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. மேலும் இதுவரை மூன்று முறை ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தி வந்தநிலையில், அண்மையில் வெளியான தேர்வு முடிவுகளில் 60 சதவீததிற்கும் அதிகமான மாணவர்கள் தோல்வி அடைந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் ஆன்லைன் தேர்வில் மாற்றத்தை கொண்டுவர அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு மே மாதம் நடைபெற உள்ளது. கொரொனோ பாதிப்பு காரணமாக கடந்த முறை நடைபெற்ற செமஸ்டர் தேர்வுகளை பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மென்பொருளை கொண்டு ஆன்-லைன் வழியில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தியது. இந்நிலையில், தற்போது அந்த முறையை அண்ணா பல்கலைக்கழகம் கைவிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து வரும் மே மாதத்தில் நடைபெறவுள்ள செமஸ்டர் தேர்வின்போது மாணவர்கள் புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது. செமஸ்டர் தேர்வில் பாடங்களில் இருந்து நேரடியாக கேள்விகளுக்கு பதிலளிக்ககூடிய வகையிலும், பாடங்களைப் புரிந்து பதிலளிக்கும் வகையில் விளக்க வகை கேள்விகள் கேட்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த புதிய முறை தேர்வு இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு தவிர்த்து மற்ற அனைத்து ஆண்டு மாணவர்களுக்கும் நடத்தப்படும் என்றும் இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு மட்டும் பழைய நடைமுறையில் வினாத்தாள் இருக்கும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Related Stories:

>