×

வட மாநிலங்களில் ஊரடங்கு காரணமாக ஈரோட்டில் ரூ.100 கோடி ரேயான் துணிகள் தேக்கம்

ஈரோடு:  ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு வீரப்பன்சத்திரம்,  அசோகபுரம், மாணிக்கம்பாளையம், லக்காபுரம், சித்தோடு மற்றும் சுற்றுப்புற  பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களில்  75 ஆயிரம் விசைத்தறிகள் இயங்குகிறது. இதில், ஈரோட்டில் முதன்மையாக ரேயான் துணிகள் உற்பத்தியும், இரண்டாவதாக அரசின் இலவச வேட்டி, சேலைகளும்,  காட்டன் துணிகளும் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ரேயான் துணிகள் டையிங்கிற்காக வடமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து  பல்வேறு வண்ணங்களாக மாற்றப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க  துவங்கியுள்ளதையொட்டி, தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரா, டெல்லி,  குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவினால், அந்த மாநிலங்களில் டையிங்  தொழில் பாதிப்படைந்தது. இதனால், ஈரோடு மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட ரேயான் துணிகள், வடமாநிலங்களுக்கு டையிங்கிற்கு அனுப்ப முடியாமல் கடந்த 20 நாட்களாக தேக்கம் அடைந்துள்ளது.

இதே நிலை நீடித்தால், இத்தொழிலில் ஈடுபட்டு வரும் 50 ஆயிரம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகி கந்தவேல் கூறுகையில், வடமாநிலங்களில்  கொரோனா ஊரடங்கு காரணமாக அங்கிருந்து ஆர்டர்கள் குறைந்து விட்டது. இதனால், நாள் ஒன்றுக்கு ரூ.7 கோடி அளவுக்கு  நடக்கும் வர்த்தகம், சரிய துவங்கி தற்போது எவ்வித  வர்த்தகமும் நடக்கவில்லை.

வடமாநில வியாபாரிகள் ஊரடங்கினால் ஏற்கனவே கொள்முதல் செய்த ஜவுளி ரகங்களுக்கு பணம் தர முடியாத நிலையில் உள்ளனர். இதனால், ஈரோடு மாவட்டத்தில் மட்டும் கடந்த 15 நாட்களில் ரூ.100 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் துணிகள் உற்பத்தியை குறைத்துள்ளோம் என்றார்.

Tags : Erode , Due to curfew in the northern states Rs 100 crore rayon fabric stagnates in Erode
× RELATED ஈரோடு கிழக்கு, மேற்கு சட்டமன்ற தொகுதிகளில் குறைந்தளவு வாக்குப்பதிவு