மருத்துவமனைகளில் பற்றாக்குறை திரவ ஆக்சிஜன் ஏற்றி வர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்: ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு

புதுடெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு வழங்கும் மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரவ ஆக்சிஜனை ஏற்றி வருவதற்காக ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை இயக்குகிறது. கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு மருத்துவ ஆக்சிஜன் மூலம் சுவாசம் அளிக்கப்படுகிறது. இதற்கான சிலிண்டருக்கு நாடு முழுவதும் இப்போது கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது, கொரானா தொற்று அதிகமாகி வருவதால், எதிர்வரும் நாட்களில் இந்த ஆக்சிஜன் சிலிண்டருக்கு மிக அதிகளவில் தேவை ஏற்படும் என கணிக்கப்பட்டு உள்ளது.

இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து திரவ ஆக்சிஜனை ஏற்றி வந்து தயார்நிலையில் வைப்பதற்கான ஏற்பாடுகளை ரயில்வே செய்துள்ளது. இதற்காக, ‘ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்’ என்ற சிறப்பு ரயில்கள், அடுத்த சில நாட்களுக்கு பசுமை பாதைகளில் இயக்கப்பட உள்ளன. குறிப்பாக, விசாகப்பட்டினம், ஜம்ஷெட்பூர், ரூர்கேலா, பொகாரா ஆகிய இடங்களில் இருந்து திரவ மருத்துவ ஆக்சிஜனை ஏற்றி வர, மும்பை அருகே உள்ள காலம்போலி, போய்சார் ரயில் நிலையங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் புறப்பட உள்ளன.

ஏற்கனவே, திரவ ஆக்சிஜனை சப்ளை செய்யும்படி மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மாநில அரசுகள் ரயில்வே நிர்வாகத்தை அணுகி உள்ளன. இதையடுத்தே, ரயில்வே இந்த திட்டத்தை வகுத்தது. ரயில்வேயின் திறந்தவெளி கூட்ஸ் பெட்டிகளின் மீது டேங்கர் லாரிகளை ஏற்றிச் சென்று, அவற்றில் திரவ ஆக்சிஜன் ஏற்றி வரப்படும். இன்று முதல் இந்த ரயில்கள் புறப்பட உள்ளன.

Related Stories:

>