கொரோனா பிரச்னையை கையாள அறிவுரை பரிசோதனையை அதிகரிப்பதை விட அதிகமாக தடுப்பூசி போட வேண்டும்: பிரதமருக்கு மன்மோகன் சிங் கடிதம்

புதுடெல்லி:  கொரோனா அச்சுறுத்தல் சூழலை எதிர்கொள்வதற்கான பல்வேறு முக்கிய ஆலோசனைகளை தெரிவித்து, பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதி இருக்கிறார். இந்த கடிதத்தில் மன்மோகன் சிங் கூறியிருப்பதாவது: கொரோனாவுக்கு எதிரான நமது போராட்டத்தின் முக்கியமான விஷயம் தடுப்பூசியாகும். எனவே, தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். கொரோனா பரிசோதனைகளை விட அதிகரிப்பதை விட, தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் சதவீதத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

நாட்டில் மொத்தமுள்ள மக்கள் தொகையில் தற்போது சிறு பகுதியினருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சரியான கொள்கை வடிவமைப்பின் மூலமாக, மேலும் பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்குவதை சிறப்பாகவும், விரைவாகவும் செய்ய முடியும். கொரோனாவை எதிர்த்து போராடுவதற்கு நாம் பல்வேறு வழிமுறைகளை கையாளலாம். ஆனால், அதில் முக்கியமான ஒன்று தடுப்பூசி போடுவதை விரைவுப்படுத்த வேண்டும்.

குறிப்பிட்ட காலத்திற்குள் எவ்வளவு தடுப்பூசி போடப்பட வேண்டும் என இலக்கு நிர்ணயித்தால், அதற்கு முன்பே தேவையான தடுப்பு மருந்தை கொள்முதல் செய்வதற்கு உத்தவிட வேண்டும். அப்போதுதான், காலக்கெடுவுக்குள் மருந்துகளை வழங்குவதற்கு நிறுவனங்கள் ஒப்புக்கொள்ளும். அவசர தேவைக்கு பயன்படுத்துவதற்காக 10 சதவீத தடுப்பு மருந்தை மத்திய அரசு இருப்பு வைக்க வேண்டும். கட்டாய உரிம முறையை அமல்படுத்துவதன் மூலமாக ஏராளமான நிறுவனங்கள் தடுப்பு மருந்தை உற்பத்தி செய்யும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மாநிலங்களுக்கு அதிகாரம்

மன்மோகன் சிங் தனது கடிதத்தில் மேலும், ‘மாநிலங்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு வழங்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளில் சில விதிவிலக்குகளை வழங்க வேண்டும். முன்கள பணியாளர்கள் யார் என்பரை வரையறை செய்யவும், அவர்கள் 45 வயதுக்கு உட்பட்டவராக இருந்தாலும் அவர்களுக்கு தடுப்பூசி வழங்கவும் அனுமதி அளிக்க வேண்டும்,’ என கூறியுள்ளார்.

சுகாதார அவசர நிலை

காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபில் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘கொரோனா நோய் தொற்றினால் குணமடைவோரின் எண்ணிக்கையை காட்டிலும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, மோடி ஜீ அவர்களே... தேசிய சுகாதார அவசர நிலையை அறிவியுங்கள். தேர்தல் பேரணிகளுக்கு தடை விதியுங்கள். நீதிமன்றங்கள்: மக்களின் வாழ்க்கைக்கு பாதுகாப்பு தாருங்கள்,’ என கூறியுள்ளார்.

டாக்சி ஓட்டுனர்களுக்கும் தடுப்பூசி

மோடிக்கு மன்மோகன் சிங் கூறியுள்ள மேலும் சில ஆலோசனைகள் வருமாறு:

* பள்ளி ஆசிரியர்கள், டாக்சி ஓட்டுனர்கள், நகராட்சி, பஞ்சாயத்து ஊழியர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோரை முன்களப் பணியாளர்களாக கருதி, 45 வயதுக்கு உட்பட்டவருக்கும் தடுப்பூசியை வழங்கலாம்.

* அடுத்த 6 மாதங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தி, விநியோகத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிறுவனங்களின் பெயரை மத்திய அரசு வெளியிட வேண்டும்.

* மாநிலங்களுக்கு தடுப்பூசி எவ்வாறு வழங்கப்படும் என்பது குறித்து மத்திய அரசு சுட்டிக்காட்ட வேண்டும்.

Related Stories:

>