தென்காசி வாக்கு எண்ணும் மையம் அருகே நவீன வசதிகள் கொண்ட கன்டெய்னர்: திமுகவினர் புகாரால் அகற்றம்

தென்காசி: தென்காசி மாவட்ட சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரி வளாகம் அருகில் மின் இணைப்பு வசதிகளுடன் கன்டெய்னர் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தென்காசி மாவட்டத்தில் உள்ள தென்காசி, ஆலங்குளம், கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குகள் பதிவான மின்னணு இயந்திரங்கள் கொடிக்குறிச்சி யுஎஸ்பி கல்லூரி வளாகத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. வருகிற மே 2ம்தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது.

இதற்கிடையே தமிழகத்தில் 12 பகுதிகளில் நவீன வசதிகளுடன் கன்டெய்னர், வாக்குப்பதிவு மையங்களுக்கு அருகில் இறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது நவீன வசதியுடன் வடிவமைக்கப்பட்ட கன்டெய்னர்களில் அமர்ந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை ஹேக் செய்து முடிவை தங்களுக்கு சாதகமாக மாற்றிவிடலாம் என்ற சந்தேகம் எதிர்க்கட்சியினர் மத்தியில் உள்ளது. இதுபோன்ற சம்பவம் தமிழகத்தின் பிற பகுதிகளில் நடைபெறாத வண்ணம் பல்வேறு அரசியல் கட்சியினரும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் தென்காசி லத்தூர் ரவுண்டானா ஆய்க்குடி சாலையில்  யுஎஸ்பி கல்லூரி வளாகத்திற்கு மிக அருகில், சிவராமன்பேட்டைக்கு செல்லும் சாலையில் நேற்று முன்தினம் இரவு கன்டெய்னர் ஒன்று புதிதாக பெயின்ட் அடிக்கப்பட்டு வந்து இறங்கியது. தகவலறிந்த தென்காசி நகர திமுக செயலாளர் சாதிர் தலைமையில் கட்சியினர் விரைந்து சென்று பார்வையிட்டனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், புதிதாக பெயின்ட் அடிக்கப்பட்ட கன்டெய்னர், வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து சுமார் 150 மீட்டர் தொலைவிற்குள் வந்திறங்கியது.

இதுகுறித்து கட்சி நிர்வாகிகளுடன் சென்று பார்வையிட்டோம். கன்டெய்னரில் மின்விளக்கு, பிளக் பாயின்ட் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. அருகிலுள்ள மின் கம்பத்தில் இருந்து மின் இணைப்பு தரப்பட்டுள்ளது. இது குறித்து விசாரித்தபோது அப்பகுதியில் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று கட்டுமான பணிகளுக்காக கன்டெய்னர் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தனர். காவல் துறையினருக்கும் புகார் கொடுக்கப்பட்டது.

கன்டெய்னரை அப்புறப்படுத்துவதுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றிலும் போலீசார் இதுபோன்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா? என்பதை இரவு பகலாக கண்காணிக்க வேண்டும் என்றனர். இந்நிலையில் நேற்று காலையில் காவல்துறையினர் அங்கு வந்து கிரேன் மூலம் கன்டெய்னரை அப்புறப்படுத்தினர்.

Related Stories:

>