×

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு ஞாயிறு விடுமுறை: சிஎம்டிஏ அதிகாரி தகவல்

சென்னை: இரண்டாம் கட்டமாக, தமிழகத்தில் கொரோனா தொற்று தினமும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர் எண்ணிக்கையும், உயிரிழப்பவர் எண்ணிக்கையும் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளான, சமூக இடைவெளியை பின்பற்றல், முகக்கவசம் அணிதல், கிருமி நாசினி பயன்படுத்துதல் போன்றவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டுமென, தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, போலீசார் மற்றும் சுகாதார துறை ஊழியர்கள் அவற்றை வசூலித்து வருகின்றனர். குறிப்பாக, பொது இடங்களில் எச்சில் துப்புபவர்கள், ரயில் நிலையங்களில் மாஸ்க் அணியாமல் சுற்றி திரிபவர்களிடமிருந்து ரூ.500 அபராதமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோயம்பேட்டில் காய்கறிகள், பழம் மற்றும் பூ மார்க்கெட்டுகள் வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, தமிழகம் மட்டுமில்லாதது, கேரளா, ஆந்திரா, கர்நாடகம் போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து, காய்கறி கொண்டு வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும், சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, இங்கு காய்கறி வாங்க வருவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வார விடுமுறை நாட்களான, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியதைப்போன்று, இந்த ஆண்டும் கடந்த மார்ச் முதல் கொரோனா தொற்று பரவல் தமிழகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. எனவே, கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக, ஏற்கனவே, மாதத்தின் இரண்டு மற்றும்  நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில், கோயம்பேடு மார்க்கெட்டிற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இரண்டாம் கட்டமாக, கொரோனா பரவலை தடுக்கும் வகையில், இனி, அனைத்து ஞாயிற்றுக்கிழமையும் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு விடுமுறை விடப்படுகிறது என சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : market ,Coimbatore ,CMDA , Coimbatore market to be closed on Sunday to curb corona spread: CMDA official
× RELATED சித்திரை விசுவையொட்டி பொள்ளாச்சி...