வெளியூர்களுக்கு செல்ல பொதுமக்கள் தயக்கம் ஆம்னி பஸ் சேவை பெருமளவில் குறைப்பு: கொரோனா இரண்டாவது அலையால் பீதி

சென்னை: தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக தீவிரமான பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியூர்களுக்கு செல்வதற்கு தயக்கம் காட்டுகின்றனர். எனவே சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்களின் சேவை பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா பரவத் தொடங்கியது. இதையடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பொது போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். பிறகு தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

இதையடுத்து பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்திருந்தனர். தற்போது, கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்துள்ளது. இம்மாதத்தின் தொடக்கம் முதல் கொரோனாவால் மீண்டும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகம் முழுவதும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருச்சி, கோவை, சேலம் போன்ற மாவட்டங்களில் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இது மேலும் அதிகரிக்கும் என சுகாதாரத்துறை வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர். இதையடுத்து பல்வேறு பிரிவுகளில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து ஆங்காங்குள்ள அரசு மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தற்காலிக சிகிச்சை மையங்கள் அமைக்கும் பணியும் முழுவீச்சில் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. பெரும்பாலானோர் வெளியில் வருவதற்கே தயக்கம் காட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் நேற்று பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு மட்டுமே மக்கள் வெளியில் தலைகாட்டினர்.

அதுவும், மதிய நேரங்களில் பெரும்பாலான சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் அமைதியாக காணப்பட்டது. இதேநிலையே வெளியூர்களுக்கு செல்வோரிடம் உள்ளது. அதிகரித்து வரும் கொரோனா தீவிரத்தால், பல்வேறு தரப்பினரும் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வதை தவிர்த்து வருகின்றனர். இதனால் அரசு மற்றும் ஆம்னி பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தனியார் ஆம்னி பஸ்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த மாத இறுதியில் சென்னையிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தினசரி 600க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது இவை பெருமளவில் குறைக்கப்பட்டு, நேற்று முன்தினம் 186 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது. இதற்கு பயணிகள் பயணிக்க வராததே காரணம் என அதன் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து, அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அன்பழகன் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு முன்பு 4,000 ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. பிறகு கொரோனா பரவலால் பஸ்கள் இயக்க தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதையடுத்து பஸ்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டதால் படிப்படியாக பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த மாத இறுதியில் 600க்கும் மேற்பட்ட பஸ்கள் சென்னையிலிருந்து பல்வேறு இடங்களுக்கு இயக்கப்பட்டன.

தற்போது மீண்டும் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பஸ்களில் பயணிக்க பொதுமக்கள் தயக்கம் காட்டுகின்றனர். இதையடுத்து ஆம்னி பஸ்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. நேற்றைய (நேற்று முன்தினம்) நிலவரப்படி சென்னையிலிருந்து 186 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் அனைத்து பஸ்களையும் இயக்கினால் நஷ்டம் ஏற்படும். எனவே பஸ்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளோம். தற்போது இயக்கப்படும் அனைத்து பஸ்களிலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories:

>