நடிகர் விவேக் மரணம், தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

சென்னை: சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் சிறப்பு கட்டுப்பாட்டு அறையை சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது: நடிகர் விவேக் மாநகராட்சியின் சார்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். அவரது மரணத்திற்கும், தடுப்பூசிக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. அவர் எப்போதும் மூடநம்பிக்கை, தேவையற்ற நம்பிக்கைக்கு எதிர்த்து குரல் கொடுத்தவர். அவர் கொடுத்த கடைசி விழிப்புணர்வு வேக்சினேசனுக்கு தான். இப்படி அவதூறு பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பினால் சைபர் கிரைமில் புகார் அளிக்கப்படும். எனவே சமுதாயத்தில் புரளி கிளப்புவது கிரிமினல் குற்றம் ஆகும்.

நடிகர் விவேக் ஒரு சிறந்த மனிதர். அவரது இறப்பு மிகப்பெரிய துரதிஷ்டவசமான நிகழ்வு. அவர் இறப்பு குறித்து அவதூறு பரப்பாமல் இருப்பதே மனதார நாம் செலுத்தும் அஞ்சலி. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தடுப்பூசி குறித்தான அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். தடுப்பூசி தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் பேசியுள்ளார். அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். சென்னைக்கு உட்பட்ட பகுதியில் யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் கட்டுப்பாடு வர உள்ளது. திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும். உணவகங்களில் பார்சல்களில் மட்டுமே வழங்கப்படும். அது குறித்தான அறிவிப்பு இரு தினங்களில் வெளியாகும். சென்னையில் தினமும் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உள்ளோம்.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 12,600 படுக்கைகள் கொண்ட கொரோனா மையங்கள் தயார் நிலையில் உள்ளது. அதில் இதுவரை 1,104 படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளது. மேலும் சென்னையில் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை. தற்போது 3 லட்சம் தடுப்பூசி கையிருப்பு உள்ளது. தற்போது வரை 13 லட்சம் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஜூலை மாத இறுதிக்குள் 45 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி முழுமையாக போட்டு முடிக்க திட்டமிட்டுள்ளோம். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 475 தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதியாக உள்ளது. இதில் 363 தெருக்களில் 6 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். 108 தெருக்களில் 10 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பிரகாஷ் கூறினார்.

Related Stories:

>